

திருச்சி மாநகரில் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த திருச்சி மளிகை, மண்டி, ஆயில், வெல்லம்- சர்க்கரை வியாபாரிகள் சங்கத்தினர் தாமாக முன்வந்து வியாபார நேரத்தைக் குறைத்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்ட 3,573 பேரில் 2,210 பேர் மாநகரில் வசிப்பவர்கள். இதேபோல், நேற்று (ஜூலை 27) வரை கரோனா தொற்றால் உயிரிழந்த 59 பேரில் மாநகரைச் சேர்ந்தவர்கள் மட்டும் 39 பேர். இதுதவிர, திருச்சி மாவட்டத்தில் நாள்தோறும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடை வீதிகள், மார்க்கெட்டுகள் ஆகிய இடங்களில் தனிமனித இடைவெளியைப் பொதுமக்கள் கடைப்பிடிக்காததே காரணமாக அமைகிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தாலும், பலரும் பொருட்படுத்தாமல் உள்ளனர்.
இதனிடையே, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த திருச்சி மாவட்டத்தில் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று இந்திய மெடிக்கல் அசோசியேஷனின் திருச்சி கிளை மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்திருந்தது.
இந்தநிலையில், திருச்சி மளிகை, மண்டி, ஆயில், வெல்லம்- சர்க்கரை வியாபாரிகள் சங்கத்தினர் தாங்களாக முன்வந்து தங்களது வழக்கமான வியாபார நேரத்தைக் குறைத்து அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சங்கத்தின் செயலாளர் எஸ்.செல்லன், 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறும்போது, "திருச்சி மாநகரில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் நோக்கிலும், கடை ஊழியர்கள், பொதுமக்களின் நலன் கருதியும் ஜூலை 29-ம் தேதி முதல் தினமும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகளை நடத்த முடிவு செய்துள்ளோம்.
இதன்படி, திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள மளிகை, மண்டி, ஆயில், வெல்லம்- சர்க்கரை வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த 130 கடைகள் இனி காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும்" என்றார்.