

தாய்ப்பால் சுரக்க உதவும் காரல் மீன்கள் வரத்து அதிகரித்துள்ளதால் ராமேசுவரம் மீனவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பெண்கள் மகப்பேறு காலத்திலும், தாய்ப்பால் சுரக்கவும் காரல் மீனை அவித்து, சாறு எடுத்துக் குடிப்பது இன்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பின்பற்றப்படுகிறது.
இதனால் ராமேசுவரம் தீவு கடற்பகுதியில் பிடிப்படும் காரல் மீன்களுக்கு தமிழக மீன் சந்தைகளில் வரவேற்பு அதிகம் உண்டு. இந்நிலையில் தற்போது ராமேசுவரம் கடற்பகதியில் காரல் சீசன் துவங்கியுள்ளது.
இது குறித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் கூறியதாவது,
ராமேசுவரம் தீவு கடற்பகுதியில் ஒரு முள் மட்டுமே காணப்படும் ஒத்தமுள் காரல் மீன், வாய்ப்பகுதி ஊசியாக இருப்பதால் ஒரு வாய்க் காரல் மீன், பொட்டு போன்று மிகவும் சிறியதாக உள்ள பொட்டுக் காரல் மீன், மீனின் மீது மஞ்சள் கோடு காணப்படுவதால் மஞ்சள் காரல், வட்ட வடிவத்தில் காணப்படுவதால் வட்டக் காரல் மீன், மீனின் மேற்பகுதியில் வரிகள் காணப்படுவதால் வரிக் காரல் மீன், இரவில் வெளிச்சதை உமிழும் வௌக்கு காரல் மீன், குதிப்பு காரல் மீன், நெடுங்காரல் மீன் என ஒன்பது வகையான காரல் மீன்கள் மீனவர்களால் பிடிக்கப்படுகின்றன.
காரல் மீன்கள் மருத்துவக் குணங்கள் அதிகமுள்ளவை. இதனால் தாய்மார்களுக்கு கர்ப்பக்காலத்திலும், குழந்தை பிறந்த பின்னர் தாய்ப்பால் ஊறவும் பாரம்பரியமாக சமைத்துக் கொடுக்கப்படுகிறது. இதனை மருத்துவர்களும் பரிந்துரை செய்கின்றனர். இதனால் ராமேசுவரம் பகுதியில் பிடிபடும் காரல் மீன்களுக்கு எப்போதும் நல்ல விலை கிடைக்கும்.
திங்கட்கிழமை கரை திரும்பிய ராமேசுவரம் விசைப்படகு மீனவர்களின் படகுகளில் படகு ஒன்றுக்கு 100 கிலோவிலிருந்து 300 கிலோ வரையிலும் காரல் மீன் பிடிபட்டுள்ளது.
ராமேசுவரம் தீவுக் பகுதியில் ரூ. 150 வரையிலும் விற்பனை செய்யப்படும் காரல் மீன்களுக்கு தமிழக மீன் சந்தைகளில் ரூ. 250ம் வெளிமாநிலங்களிலும் ரூ. 300 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது, என்றனர்.