ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட மூன்று பேர் கட்சியில் இருந்து நீக்கம்: காளையார்கோவில் திமுகவில் பரபரப்பு

ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட மூன்று பேர் கட்சியில் இருந்து நீக்கம்: காளையார்கோவில் திமுகவில் பரபரப்பு
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.மார்த்தாண்டன் மற்றும் 2 முன்னாள் ஒன்றியச் செயலாளர்களை கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனால் காளையார்கோவில் திமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வருகிற 2021 சட்டசபைத் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளில் அதிமுக, திமுக தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. ஏற்கெனவே மாவட்ட, ஒன்றியச் செயலாளர் பதவிகளை திமுக பல பிரிவுகளாக பிரித்தது.

அதேபோல் அதிமுகவும் சமீபத்தில் பிரித்தது. மேலும் கட்சி தலைமை உத்தரவுக்கு கட்டுப்பட்டு செயல்படாத நிர்வாகிகள் மீதும் இருக்கட்சிகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அதன்படி கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகவும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதாகவும் கூறி சிவகங்கை மாவட்டத்தில் காளையார்கோவில் தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.மார்த்தாண்டன், காளையார்கோவில் முன்னாள் வடக்கு ஒன்றியச் செயலாளர் மேப்பல் எம்.சக்தி, சாக்கோட்டை முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுப.முத்துராமலிங்கம் ஆகிய மூவரையும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதுகுறித்து திமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: மேப்பல் எம்.சக்தி கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோற்றார்.

அப்போது இருந்தே அவருக்கும் மாவட்டச் செயலாளருக்கும் மோதல் போக்கு இருந்து வந்தது. இதற்கிடையில் மேப்பல் எம்.சக்தியிடம் இருந்து வடக்கு ஒன்றியச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.

இதனால் காளையார்கோவிலில் இருகோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர். மேலும் சில மாதங்களுக்கு முன் காளையார்கோவிலில் நடந்த திமுக உட்கட்சித் தேர்தலில் இருத்தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இதுபோன்ற காரணங்களால் அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். அதேபோல் ஒன்றியச் செயலாளர் மார்த்தாண்டன், முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுப.முத்துராமலிங்கம் உள்ளாட்சித் தேர்தலில் சரியாக செயல்படவில்லை, என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in