

முடிதிருத்தும் தொழிலாளர்கள் அரசின் நிவாரண நிதி கேட்டு ராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் முடிதிருத்தும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
இதில் பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கும் அரசின் ரூ. 2,000 நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் இன்று 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சமூக இடைவெளியுடன் யை கடைப்பிடித்து ஆட்சியர் அலுவலகம் வந்து ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம் மனு அளித்தனர்
இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் கூறியதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் தொழில் செய்யமுடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம்.
நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு மட்டும் தமிழக அரசு சார்பில் ரூ. 2,000 நிவாரணத்தொகை வழங்கப்பட்டது.
நலவாரியத்தில் பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கும் நிவாரணம் கேட்டு ஏற்கெனவே அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில் இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. எனவே அரசு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.