Last Updated : 28 Jul, 2020 04:25 PM

 

Published : 28 Jul 2020 04:25 PM
Last Updated : 28 Jul 2020 04:25 PM

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பழுதாகும் மின்விசிறிகளை இலவசமாக சரி செய்து தரும் சமூக ஆர்வலர்; மருத்துவர்கள், நோயாளிகள் பாராட்டு

வினோத் குமார் - கணபதி: கோப்புப்படம்

கடலூர்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பழுதாகும் மின்விசிறிகளை இலவசமாக சரி செய்து தரும் சமூக ஆர்வலருக்கு மருத்துவர்கள், நோயாளிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் கரோனாவுக்கு முன்பு ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்கு சென்று வந்தனர். இங்குள்ள பிரசவ வார்டு, ஆண்கள், பெண்கள் வார்டுகள் உள்ளிட்ட அனைத்து வார்டுகளிலும் உள்நோயாளிகளாக 500-க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்கள்.

நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வார்டுகளில் பல இடங்களில் மின்விசிறி ஓடாமல் அப்படியே இருந்து வந்தது. இதனால் நோயாளிகள், சரியான காற்று இல்லாமல் அவதி அடைந்து வந்தனர்.

இதனை அறிந்த சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வினோத்குமார், மருத்துவமனையின் தலைமை மருத்துவரின் அனுமதியுடன் ஓடாமல் உள்ள மின்விசிறிகளை கழற்றி எடுத்துக் கொண்டு சென்று அவரின் மாற்றுத்திறனாளி நண்பர் கணபதி மூலம் மின்விசிறிகளுக்குக் காயில் கட்டி சரி பார்த்து மறுபடியும் மருத்துவமனையில் கொடுத்து விடுவார். இதுவரை 80-க்கும் மேற்பட்ட மின்விசிறிகளை பல முறை சரி செய்து வழங்கியுள்ளார். இவரது இந்த செயலை மருத்துவர்கள், நோயளிகள் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் வினோத்குமார் கூறுகையில், "ஒரு மின்விசிறிக்குக் காயில் கட்ட ரூ.400 வரை தேவைப்படுகிறது. இதுகுறித்து நான் சமூக வலைதளத்தில் பதிவு செய்கிறேன் என் தொடர்பில் உள்ளவர்கள் காயில் கட்டும் எனது மாற்றுத்திறனாளி நண்பர் கணபதிக்கு அவருக்கு நேரடியாக பணம் கொடுத்து விடுகிறார்கள். பணம் கொடுத்தவர்கள் பெயர் வேண்டாம் என்று மறுத்து விடுவார்கள். இதுபோன்று பலருடைய மனிதாபிமானத்தால் தான் என்னால் இந்த பணியை செய்ய முடிகிறது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x