

அடுக்குமாடிக் குடியிருப்பில் சூதாட்ட விடுதி நடத்தியதாக நடிகர் ஷாம் உள்ளிட்ட 13 பேரை போலீஸார் கைது செய்தனர். பிறகு, ஸ்டேஷனில் எழுதி வாங்கி வழக்கு எதுவும் போடாமல் ஜாமீனில் விடுவித்தனர்.
நுங்கம்பாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட லயோலா கல்லூரி எதிரே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் தளத்தில் நடிகர் ஷாம் POKER CLUB எனும் சூதாட்ட விடுதியை சட்டவிரோதமாக நடத்தி வருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று இரவு 8 மணி அளவில் நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையர் முத்து வேல்பாண்டி தலைமையில் நுங்கம்பாக்கம் போலீஸார் நடிகர் ஷாமின் சூதாட்ட விடுதிக்குச் சென்று ஆய்வு நடத்தினர்.
அப்போது அங்கு சூதாடிக்கொண்டிருந்த நடிகர் ஷாம் உட்பட 13 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களைக் காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் மீது சூதாட்ட வழக்கு 45, 46 கிரைம் நம்பர் பதிவு செய்து வழக்கு எதுவும் பதிவு செய்யாமல், எழுதி வாங்கிக்கொண்டு நிலைய ஜாமீனில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.