வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு அழைத்து வரப்படும் தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம்; வழிகாட்டுதல்களை வெளியிட்டது தொழிலாளர் துறை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
2 min read

வெளிமாநிலத் தொழிலாளர்களை மீண்டும் தமிழகத்திற்கு அழைத்து வருவதற்கான வழிகாட்டுதல்கள் குறித்து தமிழக தொழிலாளர் துறை அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்களில் லட்சக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கரோனா அச்சத்தின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.

இதையடுத்து, மத்திய அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. அதனடிப்படையில், சில கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளுடன் தொழில் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

தற்போது, சென்னை - டெல்லி இடையே மட்டும் ரயில் போக்குவரத்து செயல்பட்டு வருகிறது. மற்ற பகுதிகளுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெளிமாநிலத் தொழிலாளர்களை மீண்டும் தமிழகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு தொழில் நிறுவனங்களிடமிருந்து கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில், வெளிமாநில தொழிலாளர்களை மீண்டும் தமிழகத்திற்கு அழைத்து வர மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்த வழிகாட்டுதல்களை தமிழக தொழிலாளர் துறை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக தொழிலாளர் துறை நேற்று (ஜூலை 27) வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகள்:

1. வெளிமாநிலத் தொழிலாளர்களை அழைத்துவரும் நிறுவனம் அல்லது முகவர், அழைத்து வரப்படும் தொழிலாளர் பெயர், வீட்டு முகவரி, ஆதார் எண், செல்போன் எண், பணிபுரியும் இடம், வாகனத்தின் விவரங்கள், அவர் தனிமைப்படுத்தப்படும் இடம் ஆகிய விவரங்களைக் குறிப்பிட்டு, இ-பாஸ் கோரி தமிழகத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

2. மாவட்ட ஆட்சியர் அந்த விவரங்களை ஆய்வு செய்து இ-பாஸ் வழங்க ஒப்புதல் அளிக்கலாம்.

3. வெளிமாநிலத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனம் அல்லது முகவர்கள் மூலம் பேருந்து, வேன்களில் அழைத்து வரப்பட வேண்டும்.

4. பேருந்து அல்லது வேனில் ஏற்றப்படுவதற்கு முன்னர் தொழிலாளர்களின் வெப்பநிலை பரிசோதிக்கப்பட வேண்டும்.

5. தமிழகத்துக்கு வந்த பிறகு, தொழில் நிறுவனம் அல்லது முகவரின் சொந்தச் செலவில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தொற்று உறுதியானால் மருத்துவமனையில் அவர்களை சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்ற இடத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

6. தனிமைப்படுத்தப்படும் காலத்தில் தொழிலாளர்களுக்கு அறிகுறி தென்பட்டால் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

7. தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்த, அறிகுறிகள் இல்லாத தொழிலாளர்கள் பணியிடத்துக்குச் செல்லலாம். அங்கு அடிக்கடி சோப் மூலம் கைகழுவுதல், முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற சுகாதாரத் துறை வழிகாட்டுதல்களைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அனைத்துப் பணியாளர்களுக்கும் தினசரி வெப்பநிலை பரிசோதிக்கப்பட வேண்டும்.

8. வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை அவர்களது தாய்மொழியில் வழங்க வேண்டும்.

9. தொழிலாளர்கள் தங்கியுள்ள இடம் காற்றோட்டம் மிகுந்ததாக, சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தம், சுகாதாரம் குறித்து அவர்களுக்கு அவ்வப்போது அறிவுறுத்த வேண்டும்.

10. வெளிமாநிலப் பணியாளர்கள் அனைவரும் புலம்பெயர் தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் பதிவு செய்யப்பட, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய சூழலில் தொழிலாளர் துறையின் இணையதளம் (https://labour.tn.gov.in/sm) வாயிலாக ஆன்லைனிலும் பதியலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in