Published : 28 Jul 2020 01:03 PM
Last Updated : 28 Jul 2020 01:03 PM

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக பாலிவுட்டில் செயல்படும் கும்பல்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கண்டனம்

சென்னை

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக பாலிவுட்டில் ஒரு கும்பல் செயல்படுவதும், வதந்தி பரப்பி வாய்ப்பைப் பறிப்பதும் கண்டனத்துக்குரியது. உலக அளவில் இசையால் பிரபலமான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் பற்றி அவர் கூறியதை அறிந்து வருத்தப்படுகிறேன் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் 90களில் அறிமுகமானவர் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரான அவர் ஆஸ்கர் விருது பெற்றபோது, 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' எனக் கூறினார். அவரது எளிமையால் உலகம் முழுவதும் பாராட்டப்பட்டார்.

தமிழ்த் திரையுலகிலிருந்து ஹாலிவுட் வரை இசையமைக்கச் சென்றவர் இசையமைப்பாளர் ரஹ்மான். தற்போதும் சில ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் ரஹ்மான், தன்னைப் பாலிவுட்டில் நுழையவிடாமல் சிலர் செயல்படுவதாகத் தெரிவித்தது திரையுலகில் அதிர்வை ஏற்படுத்தியது.

பாலிவுட்டில் சிலரது அழுத்தம் காரணமாக படவாய்ப்புகள் நழுவியதால் தற்கொலை செய்துகொண்ட சுஷாந்த் சிங்கின் மரணம் பெரிய அளவில் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், அவரது கடைசிப் படமான 'தில் பெச்சாரா' படத்திற்கு இசையமைத்தார் ரஹ்மான்.

அந்தப் பட வெளியீட்டின்போது ரஹ்மான் தனது கருத்தைப் பதிவு செய்தார். பாலிவுட்டில் ஒரு கும்பல் தனக்கு வாய்ப்பு கிடைப்பதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும், பாலிவுட் படங்களில் அதிக அளவு பணியாற்ற முடியாமல் இருப்பதற்கான சூழல் குறித்தும் தன் கருத்தைப் பகிர்ந்தார்.

'' 'தில் பெச்சாரா' படத்திற்காக இயக்குநர் முகேஷ் சாப்ரா தன்னிடம் வந்தபோது, இரண்டு நாட்களில் நான்கு பாடல்களை அவருக்கு முடித்துக் கொடுத்தேன். ஆச்சர்யப்பட்ட அவர் 'பாலிவுட்டில் சிலர் உங்களைப் பற்றி பலவிதமாகக் கூறினார்கள். உங்களைப் பற்றி ஏதேதோ கதைகள் சொல்கிறார்கள். உங்களிடம் போக வேண்டாம் என்று கூடச் சொன்னார்கள்' என்று என்னிடம் தெரிவித்தார். அப்போதுதான் எனக்கு எதிராக பாலிவுட்டில் ஒரு கும்பல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது எனக்குப் புரிந்தது'' என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.

புகழ்பெற்ற ரஹ்மானுக்கே இந்த நிலை என்றால் மற்றவர்கள் எம்மாத்திரம் என்கிற நிலையில் ரஹ்மானுக்கு ஆதரவான குரல்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் அரசியல் களத்திலிருந்தும் ஆதரவுக் குரல் எழுந்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“பாலிவுட்டில் தனக்கு எதிராக ஒரு தரப்பினர் வதந்தி பரப்பி, நல்ல படங்களும் அதிக வாய்ப்புகளும் கிடைக்காமல் இருப்பதற்குக் காரணமாக உள்ளனர் என்று இந்திய மக்களின் இதயம் மட்டுமல்ல உலக அளவில் இமயம் தொட்ட நம் தமிழ் மண்ணின் ஆஸ்கர் நாயகன் @arrahman தெரிவித்துள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது.

எல்லைகளில்லா இசையை எல்லைகள் கடந்து இயக்கி இந்தியாவிற்கே புகழ் சேர்த்த நமது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்னுடைய மனப்பூர்வமான ஆதரவைப் பதிவு செய்து கொள்கிறேன்”.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x