Published : 23 Sep 2015 11:18 AM
Last Updated : 23 Sep 2015 11:18 AM

மதிமுகவை கருணாநிதியால் அழிக்க முடியாது: கலிங்கப்பட்டி விழாவில் வைகோ ஆவேசம்

`தொண்டர்களால் உருவான இயக்கமான மதிமுகவை கருணாநிதியால் அழிக்க முடியாது’ என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

தனது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம், கலிங்கப்பட்டியில் உதவியாளர் சந்துருவுக்கு ரூ.17 லட்சம் செலவில் வைகோ வீடு கட்டித் தந்துள்ளார். இந்த வீட்டை மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி நேற்று திறந்து வைத்தார். இவ்விழாவில் வைகோ பேசும்போது, `மதிமுகவை கருணாநிதியால் அழிக்க முடியாது. இது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். தமிழகத்தில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் மாற்றாக 5 கட்சி கூட்டமைப்பு இருக்கும். இந்த கூட்டியக்கம் அமைந்தது அதிமுகவுக்கு சாதகமாக அமைந்துவிட்டது என்று கூறுவது தவறு.

தமிழகத்தில் கட்சி சாராதவர்கள் 65 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அவர்களது ஆதரவை மக்கள் கூட்டு இயக்கம் பெற்று வருகிறது. நாங்கள் ஜாதி, மதம் பார்க்கவில்லை. தமிழகத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகளை முன்வைத்து நாங்கள் போராட்டங்களை நடத்தி வருகிறோம்’ என்று குறிப்பிட்டார்.

விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் பேசும்போது, `தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்க மக்கள் நல கூட்டியக்கம் செயல்படுகிறது. மாற்றத்தை விரும்பாதவர்கள் இந்த கூட்டுஇயக்கத்தை குலைக்க முயற்சிக்கிறார்கள். அந்த முயற்சிகள் தோல்வி அடையும்’ என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசும்போது, `மதிமுகவில் இருந்து சிலரை வெளியே இழுத்து மக்கள் நல கூட்டு இயக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள். திருவாரூரில் வரும் 5-ம் தேதி கூட்டியக்கம் சார்பில் மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்த இருக்கிறோம்’ என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசும்போது, `தமிழகத்தில் பகுத்தறிவு கொள்கைகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதற்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். தேர்தல் மட்டுமே எங்கள் நோக்கமல்ல’ என்றார். தமுமுக தலைவர்களில் ஒருவரான ஹைதர் அலி, தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.

அக். 3-ல் மறுமலர்ச்சி பயணம்

மதிமுக மாவட்டச் செயலாளர்கள், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலையில் திருநெல்வேலி மாவட்டம், கலிங்கப்பட்டியில் நடைபெற்றது. கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:

மக்கள் நலக்கூட்டு இயக்கத்துக்கு ஆதரவு திரட்டவும், ஊழலுக்கு எதிராகவும், நதிநீர் பிரச்சினைகளில் எங்கள் பணிகளை விளக்கியும், அதிமுகவின் ஊழலை, திமுகவின் குடும்ப அரசியலை மக்களுக்கு சொல்லவும் வரும் அக்டோபர் 3-ம் தேதி காலை 9 மணிக்கு காஞ்சிபுரத்தில் அண்ணாவின் இல்லத்திலிருந்து ‘மறுமலர்ச்சிப் பயணத்தை’ தொடங்கவுள்ளேன்.

17, 18-ம் தேதிகளில் தூத்துக்குடி, 19, 20-ம் தேதிகளில் திருநெல்வேலி, 21, 22-ம் தேதிகளில் கன்னியாகுமரி என 20 நாட்களுக்கு முதற்கட்ட பயணம் மேற்கொள்ளப்படும். 2-ம் கட்ட பயணத்துக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

மனிதநேய மக்கள் கட்சியும் இந்த அணியில் இடம்பெற வலியுறுத்தியுள்ளோம். வரும் 5-ம் தேதி திருவாரூரில் மக்கள் நலக் கூட்டு இயக்கத்தின் கூட்டம் நடக்க உள்ளது. அந்த கூட்டத்தில் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவுள்ளோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x