

நாமக்கலைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் எஸ்.கே.நடராஜன்-ஜோதி தம்பதியினரின் 2-வது மகள் என்.என்.கனிகா சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வில் 500-க்கு 490 மதிப்பெண் பெற்றுள்ளார்.
மிக அதிக மதிப்பெண் பெற்ற மாணவி கனிகாவை, பிரதமர் மோடி ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) நிகழ்ச்சியின்போது நேரடியாக தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து மாணவியின் தந்தை எஸ்.கே.நடராஜன் கூறியதாவது: டேங்கர் லாரி ஓட்டுநராக உள்ளேன். சொந்தமாக டேங்கர் லாரியும் வைத்துள்ளேன். எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் புத்தகத்தை பல முறை வாசித்துள்ளேன். அதில் உள்ள கருத்துகளை மகள்களுக்கு தெரிவிப்பேன்.
ஓட்டுநர் தொழிலில் வருவாய் குறைவு என்ற போதிலும் 2 மகள்களையும் நன்றாக படிக்க வைக்க வேண்டுமென்ற எண்ணம் மட்டும் இருந்தது. கல்வி என்ற சொத்தை மட்டுமே என்னால் வழங்க முடியும்.
மூத்த மகள் ஷிவானி பிளஸ் 2 தேர்வில் 1,145 மதிப்பெண் பெற்றார். நீட் தேர்வில் வெற்றி பெற்று திருச்சியில் தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்கிறார் என்றார்.
இதுகுறித்து மாணவி கனிகா கூறும்போது, “திடீரென பிரதமர் பேசியது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவரது வாழ்த்து, கல்வியில் மேலும் கவனம் செலுத்த வேண்டிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்றாடம் நடத்தும் பாடங்களை படிப்பேன். டியூசன் செல்லவில்லை. பெற்றோர் குடும்ப சிரமங்களை எங்களிடம் வெளிப்படுத்த மாட்டார்கள். அது கல்வியில் கவனம் செலுத்த வசதியாக அமைந்தது” என்றார்.