

சீமானை கைது செய்ய வேண்டும் என வீடியோ பதிவு செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற நடிகைவிஜயலட்சுமியிடம் மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் நேரில் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.
ஃப்ரெண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன், மீசையை முறுக்கு உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளவர் விஜயலட்சுமி. சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் சென்னை திருவான்மியூரில் வசிக்கிறார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிக மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்த விஜயலட்சுமி, தற்போது அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்னதாக அவர் வீடியோ ஒன்றையும் பதிவிட்டு வெளியிட்டிருந்தார். அதில், ‘‘சீமானும், சீமான் கட்சியினரும் கொடுத்த அழுத்தம் காரணமாக மன அழுத்தத்தில் தற்கொலைக்கு முயன்றேன். அதேபோல, ஹரிநாடார் என்பவரும் என்னை அசிங்கப்படுத்தினார். எனவே, சீமான், ஹரிநாடாரை கைது செய்ய வேண்டும்’’ என்று கண்ணீர் வடித்தபடி அதில்கூறியிருந்தார்.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவியது. இந்நிலையில், மருத்துவமனைக்கு எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் வெங்கடேசன் வந்து, விஜயலட்சுமியிடம் நேரில் விசாரணை நடத்தினார். விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தை அவர்பதிவுசெய்து கொண்டார்.
மாஜிஸ்திரேட் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் போலீஸார் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க உள்ளனர்.