சாத்தான்குளம் சம்பவத்தில் இறந்த ஜெயராஜ் மகளுக்கு அரசு பணி நியமன ஆணையை முதல்வர் வழங்கினார்

சாத்தான்குளம் சம்பவத்தில் இறந்த ஜெயராஜ் மகளுக்கு அரசு பணி நியமன ஆணையை முதல்வர் வழங்கினார்
Updated on
1 min read

சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜின் மகள் பெர்சிஸுக்கு இளநிலை உதவியாளர் பணிக்கான நியமன ஆணையை முதல்வர் பழனிசாமி நேற்று வழங்கினார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து தலாரூ.10 லட்சம் வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசின் விதிகளுக்குட்பட்டு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கவும் முதல்வர் பழனிசாமி கடந்த ஜூன் 24-ம் தேதிஉத்தரவிட்டார். அதன்படி, அக்குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர்கடம்பூர் ராஜு கடந்த ஜூன் 26-ம் தேதி வழங்கினார்.

இதைத் தொடர்ந்து குடும்பத்தின் வாரிசுதாரரான பெர்சிஸுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணிக்கான நியமன ஆணையை முதல்வர்பழனிசாமி நேற்று வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜு, வைகுண்டம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், தலைமைச் செயலர் கே.சண்முகம், பொதுத்துறை செயலர் ப.செந்தில்குமார், தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதல்வரிடம் பணி நியமனஆணை பெற்ற பின், செய்தியாளர்களிடம் பெர்சிஸ் கூறியதாவது:

எங்கள் குடும்பம் அடைந்துள்ள வேதனையில் இருந்து மீள்வதற்கு அரசு இந்த வேலையை எனக்குகொடுத்துள்ளது. சாத்தான்குளத்தில் நடந்த சம்பவத்துக்கு முதல்வர் வருத்தம் தெரிவித்ததுடன், நியாயமான முறையில் விசாரித்து, தவறுசெய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம் என்று உறுதி அளித்துள்ளார். இந்த விஷயத்தில் எங்களுக்கு உதவிய தமிழக அரசு, மக்கள், அனைத்து கட்சியினர், அனைத்து சமுதாய அமைப்புகள், வியாபார சங்கங்களுக்கு நன்றி.

தற்போது சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. எங்களுக்கான நியாயத்தை நீதித்துறை வழங்கும் என்று நம்புகிறோம். அதற்கு தமிழக அரசும் உறுதுணையாக இருந்து, வழக்கை விரைவில் விசாரித்து, தவறு செய்தவர்களுக்கு தண்டனை வாங்கித் தரவேண்டும் என்று கூறியுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in