Published : 28 Jul 2020 06:57 AM
Last Updated : 28 Jul 2020 06:57 AM

பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் தயார்

தமிழக அரசு அறிவித்தவுடன் பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகங்கள் தயாராகி வருகின்றன.

கரோனா ஊரடங்கு வரும் 31-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட பணிமனைகளில் 20 ஆயிரம் அரசு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு முடிந்த பிறகு பேருந்துகளின் சேவையை மீண்டும் தொடங்குவது தொடர்பாக போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்துவரும் 29-ம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கரோனா ஊடரங்கு வரும் 31-ம் தேதி முடிவடைந்த பிறகு தமிழக அரசின் அறிவிப்பைதொடர்ந்தே நாங்கள் செயல்படுவோம். இருப்பினும், நாங்கள் பேருந்துகளை தொடர்ந்து பராமரித்து கொண்டும், கிருமிநாசினி மூலம் பேருந்துகளை தூய்மைப்படுத்திக் கொண்டும் தயார் நிலையில் இருக்கிறோம். ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு முக கவசங்கள், கை கழுவும் திரவங்கள், கையுறைகள் உள்ளிட்டவற்றை வாங்கி தயாராக வைத்துள்ளோம்.

கரோனா ஊரடங்கால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு இதுவரை ரூ.3,300 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x