

தெருவிளக்குகள் 300 கோடி ரூபாய் செலவில் எல்.இ.டி. விளக்குகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கிராமப்புற தெருக்கள் 120 கோடி ரூபாய் செலவில் சிமெண்ட் பேவர் பிளாக் கொண்ட தெருக்களாக மாற்றப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை படித்தார். அதில் அவர் கூறியதாவது:
''ஊரகப் பகுதிகளில் தற்போது பயன்பாட்டில் உள்ள தெரு விளக்குகளின் மின் கட்டண செலவு மற்றும் பராமரிப்பு செலவினம் அதிகமாக உள்ளதைக் கருத்தில் கொண்டும், பசுமைத் தொழில் நுட்பத்தினை ஊக்குவித்திடும் பொருட்டும் நடப்பாண்டில் ஊரகப் பகுதிகளில் சுமார் 8 லட்சம் தெரு விளக்குகள் எல்.இ.டி. விளக்குகளாக 300 கோடி ரூபாய் செலவில் மாற்றிட நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், குக்கிராமங்களை வளர்ச்சி அலகாகக் கொண்டு ஒவ்வொரு குக்கிராமத்திலும் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் நோக்கோடு, தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டம் என்னும் ‘தாய்’ திட்டத்தினை எனது தலைமையிலான அரசு 2011-12 முதல் செயல்படுத்தி வருகிறது.
‘தாய்’ மற்றும் இதர திட்டங்களின் கீழ் கிராமங்களில் உள்ள தெருக்கள் சிமெண்ட் பேவர் பிளாக் கொண்டு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சிமெண்ட் பேவர் பிளாக் கொண்டு அமைக்கப்படும் தெருக்கள், எழிலாக இருப்பதுடன், நிலத்தடி நீர் செறிவூட்டவும் பயன்படும்.
2015-16 ஆம் ஆண்டில் 400 கி.மீ. நீளமுள்ள கிராமப்புற தெருக்கள் 120 கோடி ரூபாய் செலவில் சிமெண்ட் பேவர் பிளாக் கொண்ட தெருக்களாக மாற்றப்படும்'' என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.