

மருத்துவ சேர்க்கையில் இதர பிற்பட்டோருக்கான (ஓபிசி) 50% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில்‘இது தொடர்பாக சட்டம் இயற்றவேண்டும்’ என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இத்தீர்ப்பை வரவேற்று அரசியல் கட்சிகள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம்: மருத்துவப்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அறிந்து வரவேற்று மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சமூகநீதி காத்த ஜெயலலிதா வழியில், சட்டப் போராட்டத்தின் மூலம் வெற்றி பெற தமிழக அரசுக்கு துணை நின்ற அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: இத்தீர்ப்பு பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறது. 4 ஆண்டுகளாக, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கு இந்திய மருத்துவக் கழகமும்,மத்திய பாஜக அரசும் கூட்டணி அமைத்து, இழைத்துவந்த அநீதிக்கு முடிவு கட்டியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இத்தீர்ப்பை ஏற்று, மத்திய அரசு உடனடியாகக் கமிட்டியை அமைக்க வேண்டும். 50 சதவீத இடஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இந்தக் கல்வி ஆண்டிலேயே வழங்க வேண்டும். இத்தீர்ப்பின் மீது மத்தியஅரசு மேல்முறையீடு செய்யக் கூடாது.
பாமக நிறுவனர் ராமதாஸ்: இத்தீர்ப்பு, சமூகநீதிக்கான பாமகவின் சட்ட போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகும். இத்தீர்ப்பின்படி, மத்திய அரசு உடனடியாக தமிழக அரசுடன் கலந்து பேசி குழுவை அமைக்க வேண்டும். இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் விரைந்து மேற்கொண்டு மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை பிறப் பிக்க வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: இத்தீர்ப்பு சமீபத்தில் இடஒதுக்கீட்டுக்கு ஏற்பட இருந்த பேராபத்தை தடுத்து சமூகநீதியை நிலைநாட்டி இருக்கிறது. இதை செயல்படுத்தும் வகையில் மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்: இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு அகில இந்தியஒதுக்கீட்டில் இடஒதுக்கீடு வழங்கஅளிக்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது. பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் கோரிக்கையை காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில் கண்டு கொள்ளவில்லை. 2015-ல்உச்ச நீதிமன்றத்தில் சலோனிகுமார் என்பவரால் தொடரப்பட்ட வழக்கில் தங்களை இணைத்துக் கொள்ளாமல் ஒதுங்கி வேடிக்கை பார்த்துவிட்டு இப்போது மருத்துவ படிப்புக்கான அகில இந்திய கலந்தாய்வுக் கூட்டம், முடிந்துவிட்ட நிலையில், திடீரென்று தடை கோரிவழக்கு தாக்கல் செய்திருப்பது உள்நோக்கம் கொண்டது என்பதைமக்கள் அறிவார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: இத்தீர்ப்பின்படி 3 மாதங்கள்வரை காத்திராமல், விரைவில் மூவர் குழு கூடி முடிவெடுப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இக்குழுவில் இடம்பெறவுள்ள மத்திய சுகாதாரத் துறை செயலாளர், மருத்துவ கவுன்சில் அதிகாரி ஆகியோர் மீண்டும் மத்திய பாஜக அரசின் இடஒதுக்கீட்டு எதிர்ப்பு நிலையை மேற்கொள்ளக் கூடாது.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்: தமிழக மக்களின் உரிமைகளைத் தாரை வார்த்துக் கொடுத்தே, தன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் தமிழக அரசு, ஓபிசி இடஒதுக்கீட்டில் உயர் நீதிமன்ற உத்தரவை விரைந்து செயல்படுத்த அழுத்தம் தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள் ளனர்.
இதேபோல், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோரும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.