வன உயிரிகளைக் காப்பாற்ற வனத்துறையினர் முன்வர வேண்டும்: ஏலகிரியில் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ஏலகிரி மலையில் குரங்களுக்கு உணவளித்த சமூக ஆர்வலர்கள்
ஏலகிரி மலையில் குரங்களுக்கு உணவளித்த சமூக ஆர்வலர்கள்
Updated on
2 min read

ஏலகிரி மலையில் உணவின்றித் தவிக்கும் வன உயிரினங்களைக் காப்பாற்ற வனத்துறையினர் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி - திருப்பத்தூர் சாலையில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாகக் காணப்படும். 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட ஏலகிரி மலையில் 14 சிறு கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

ஏலகிரி மலையின் மொத்தப் பரப்பளவு 30 சதுர கிலோ மீட்டர் ஆகும். ஏலகிரி மலையின் வடக்குப் பகுதியிலும், மலை உச்சியிலும் அரிய வகை மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. இந்த வனப்பகுதியில் பல அபூர்வ வன உயிரினங்கள் வசித்து வருகின்றன. குரங்குகள், மான்கள், முயல், காட்டுப்பூனை ஆகியவை அதிக அளவில் வசித்து வருகின்றன.

ஏலகிரி மலையில் வசித்து வரும் வன விலங்குகள் காடுகளில் உள்ள பழங்கள், கிழங்குகளைச் சாப்பிட்டு வந்தாலும், சுற்றுலாப் பயணிகள் அளிக்கும் உணவுகளையும் விரும்பி சாப்பிட்டு வந்தன. குறிப்பாக சுற்றுலாப் பயணிகளையும், மலைவாழ் மக்களையுமே நம்பிக் குரங்கு இனங்கள் வசித்து வந்தன.

இந்நிலையில், கரோனா ஊரடங்கு உத்தரவால் ஏலகிரி மலைக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அனைத்துப் பாதைகளும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டன. மலையில் உள்ள தங்கும் விடுதிகள், உணவங்கள், பூங்கா மற்றும் விளையாட்டுத் தலங்கள் கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டுள்ளன.

மலையில் வசித்து வரும் மலைவாழ் மக்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். சுற்றுலாப் பயணிகளும், மலைவாழ் மக்களும் இல்லாததால் ஏலகிரி மலைப்பாதை வெறிச்சோடிக் காணப்படுகிறது. இதனால், மனித இனத்தை நம்பியிருந்த குரங்குகள் தற்போது உணவின்றித் தவித்து வருகின்றன. சரியான உணவு, குறிப்பிட்ட நேரத்தில் கிடைக்காததால் ஏலகிரி மலையில் 25-க்கும் மேற்பட்ட குரங்குகள் பசியால் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வாணியம்பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் வனத்துறை அதிகாரிகளிடம் உரிய அனுமதி வாங்கி, குரங்குகளுக்கு உணவளிக்க இன்று (ஜூலை 27) ஏலகிரி மலைக்கு வந்தனர்.

அங்கு ஒவ்வொரு மலைப்பாதையில் கூட்டம், கூட்டமாக அமர்ந்திருந்த குரங்குகள் மனிதர்கள் வருவதைக் கண்டவுடன் துள்ளிக் குதித்தன. உடனே, வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட பழங்கள், தண்ணீர் பாட்டில்களை குரங்களுக்குக் கொடுத்து அதன் பசியைச் சமூக ஆர்வலர்கள் போக்கினர். 200-க்கும் மேற்பட்ட குரங்குகள் ஒன்றாகக் கூடியதால் சமூக ஆர்வலர்கள் கொண்டு சென்ற பழங்கள் போதுமானதாக இல்லை.

ஏலகிரி மலையில் வசிக்கும் நூற்றுக்கணக்கான வன விலங்குகளுக்குத் தினமும் இதுபோன்ற உதவிகளைத் தங்களால் செய்ய முடியாத காரணத்தால், மாவட்ட வனத்துறையினர் வன விலங்குகளைக் காப்பாற்றப் போதிய உணவுகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்துத் திருப்பத்தூர் மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ''வனப்பகுதிகளில் வசிக்கும் வன விலங்குகளுக்கு ஏற்கெனவே தண்ணீர் வசதிகள் செய்து கொடுத்துள்ளோம். ஏலகிரி மலையிலும் ஒரு சில இடங்களில் தண்ணீர் வசதி செய்துள்ளோம். விரைவில், உணவளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும்'' என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in