

பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே தனது தொகுதி மக்களோடு களத்தில் இருந்தவர் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார். கரோனா நிவாரணம் வழங்குவது, மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுப்பது எனத் தீவிரம் காட்டினார். இந்நிலையில் ராஜேஷ்குமாரும் கரோனா தொற்றுக்கு ஆளானார். இப்போது நாகர்கோவில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைகள் எப்படி இருக்கின்றன என ராஜேஷ்குமாரிடம் பேசினேன். “கரோனாவின் தொடக்கத்தில் இருந்தே தொகுதிக்குள் பல்வேறு பணிகளையும் செஞ்சுட்டு இருந்தேன். ஒரு எம்.எல்.ஏவோட குரல் அந்தத் தொகுதி மக்களோட மனசாட்சியின் குரலா ஒலிக்கணும். அதை மனசுல வைச்சுதான் ஓடிக்கிட்டு இருந்தேன். பிரதமர் முதன்முதலா லாக்டவுன் போட்டாரே, அப்போதான் கரோனா ரொம்ப ஆபத்தானதுபோல் ஒரு மிரட்சி இருந்துச்சு. ஆனாலும் அப்பவே மக்களுக்காக நானும், நிர்வாகிகளுமா களத்தில் நின்னோம்.
அரசே ஒருகட்டத்தில் கரோனாவோட வாழப் பழகிக்கச் சொல்லும் அளவுக்குப் போயிடுச்சு. என்னைக் கேட்டால் சிக்குன் குனியா, அம்மைநோய் போல் இதுவும் பரவலாக வந்துபோகும். நமது உடம்பில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து அதன் தாக்கம் இருக்கும். வயசானவங்க, நோயாளிகள், குழந்தைகள் கொஞ்சம் எச்சரிக்கையா இருந்தாப் போதும். எனக்கு திடீர்னு ரெண்டு நாளா உடம்பு வலி இருந்துச்சு. அடுத்த நாளே லேசா காய்ச்சலும் அடிச்சதால கரோனா டெஸ்ட் பண்ணுனேன். பாசிட்டிவ்னு ரிசல்ட் வந்ததுமே, நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்ந்துட்டேன்.
இதே சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.3 லட்சம் வரை கட்டணம். ஆனா, அரசு மருத்துவமனையிலேயே அதுக்கு இணையாக தரமான சிகிச்சை இலவசமாவே கிடைக்குது. பரிசோதனைக் கருவியில் இருந்து மருந்துகள் வரை அனைத்தும் தரமாக அரசு மருத்துவமனையில் இருக்கு. அடிக்கடி டாக்டருங்க வந்து பாக்குறாங்க. என்ன, தனியார் மருத்துவமனைகளில் நம்ம வீட்ல இருக்குற மாதிரி இருக்கலாம். இங்கே அதுமட்டும் சாத்தியம் இல்ல. சாப்பாட்டைப் பொறுத்தவரை வெளியில் உணவகங்களில் இருந்து தயாரிச்சுக் கொடுக்குறாங்க. அது ஆரோக்கியமாகவும், ருசியாகவும் இருக்கு.
இதுபோக, கபசுரக் குடிநீர், முட்டை, பனங்கற்கண்டுப் பால்னு நேரா நேரத்துக்கு ஊட்டச்சத்தான உணவுகள் கிடைக்குது. கரோனா சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகள் ரொம்ப நல்லதுங்குறதுக்கு என்னோட அனுபவமே சாட்சி. அதேநேரத்தில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி, கூடுதல் மருத்துவர்களையும் நியமித்தால் ஏராளமான மக்கள் பயன்படுவார்கள். இந்த நேரத்தில் அரசு, மக்களுக்கு உதவியா இதைக் கட்டாயம் செய்யணும்” என்றார் ராஜேஷ்குமார்.