

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ரேஷன் அரிசியில் துர்நாற்றம் வீசியதால் கிராமமக்கள் கடையை முற்றுகையிட்டனர்.
மானாமதுரை அருகே விளாக்குளம் ரேஷன்கடை மூலம் 300 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
கடந்த காலங்களில் ஒரு குடும்பத்திற்கு 12 முதல் 20 கிலோ வரை இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. தற்போது கரோனா ஊரடங்கால் பிரதமர் சிறப்பு திட்டத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்ப கூடுதலாக அரிசி வழங்கப்படுகிறது.
குடும்பத்திற்கு 12 முதல் 40 கிலோ வரை அரிசி வழங்கப்படுகிறது. தற்போது வழங்கப்படும் ரேஷன்அரிசி பழுப்பு நிறமாகவும், துர்நாற்றத்துடனும் உள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த கிராமமக்கள் ரேஷன்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அங்கு வந்த மானாமதுரை ஒன்றிக்குழுத் தலைவர் லதா, துணைத் தலைவர் முத்துச்சாமி, ஒன்றியக் கவுன்சிலர்கள் அண்ணாத்துரை, சுந்தரவள்ளி ஆகியோரும் கிராமமக்களுக்கு ஆதரவாக போராட்டம் செய்தனர்.
தொடர்ந்து தரமான அரிசி வழங்க அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக ஒன்றியக்குழுத் தலைவர் தெரிவித்ததை அடுத்து கிராமமக்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், ‘ரேஷன்அரிசி கருப்பாகவும், மஞ்சள் நிறத்திலும் உள்ளது. துர்நாற்றம் வீசுவதால் சமைக்க முடியவில்லை. ஆடு, மாடு,கோழி கூட சாப்பிடுவதில்லை. இதனால் வெளியில் கூடுதல் விலை கொடுத்து அரிசி வழங்க வேண்டியநிலை உள்ளது,’ என்று கூறினர்.