

மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதிகளில் இன்று கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது.
‘விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தைப் படிப்படியாக ரத்து செய்யும் நோக்கத்துடன் இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது. இதை அனுமதிக்கக் கூடாது’ என்று சொல்லி ஒரு கோடி விவசாயிகள் கையெழுத்திடும் கையெழுத்து இயக்கத்தை, மின் உரிமைப் பாதுகாப்புக் கூட்டியக்கத்தின் சார்பில் கடந்த மாதம் விவசாயிகள் தொடங்கினர்.
இதன் அடுத்த கட்டமாக, ஜூலை 27-ல் நாடெங்கும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டத்தை நடத்த விவசாய சங்கங்கள் அறிவித்தன. இந்நிலையில், சத்தியமங்கலம் ஒன்றியத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அனைத்துக் கட்சியினர் கலந்துகொண்ட கருப்புக் கொடி போராட்டங்கள் நடைபெற்றன. சத்தியமங்கலம் அருகேயுள்ள அரசூரில் திமுக, மதிமுக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்குத் தலைமை வகித்த சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் கே.சி.பி.இளங்கோ பேசுகையில், “கரோனா பொது முடக்கத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரமே முடங்கிப் போயிருக்கும் தருணத்தில் மின்சார சட்டத் திருத்த மசோதாவுடன், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்புச் சட்டம், விலை உத்தரவாதம் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்தப் பாதுகாப்புச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களையும் மத்திய அரசு கொண்டுவருகிறது. விவசாய விரோத சட்டங்களான இவற்றைத் திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் நாடெங்கும் போராட்டங்கள் தொடரும்” என்றார்.
இந்தப் போராட்டத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ்.சி.நடராஜ் முன்னிலை வகித்தார். சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர்கள் ராஜம்மாள், சம்பத், சரோஜா, சின்னச்சாமி, கவிதா மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்களான செந்தில்குமார், முருகேசன், செந்தில்நாதன், முருகன், சந்திரா, முருகேசன் ஆகியோரும் திமுக, இந்தியக் கம்யூனிஸ்ட், மதிமுக பொறுப்பாளர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.