

வனத்துறையினர் விசாரணையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் தென்காசி விவசாயியின் குடும்பத்துக்கு நீதி வழங்கக் கோரி திமுகவினர் ஆட்சியரிடன் கோரிக்கை விடுத்தனர்.
தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அணைக்கரைமுத்து வனத்துறை விசாரணையில் கடந்த 22-ம் தேதி இரவு உயிரிழந்தார்.
அவரது குடும்பத்தினரை திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆவுடையப்பன் (திருநெல்வேலி கிழக்கு), சிவ பத்மநாதன் (திருநெல்வேலி மேற்கு), திமுக எம்பிக்கள் ஞானதிரவியம் (திருநெல்வேலி), தனுஷ் எம்.குமார் (தென்காசி) மற்றும் நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர், தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன், மாவட்ட காவல் கண்காணிப்பளர் சுகுணாசிங் ஆகியோரைச் சந்தித்து விவசாயி குடும்பத்துக்கு நீதி கிடைக்க வலியுறுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆவுடையப்பன் கூறும்போது, “உயிரிழந்த விவசாயி அணைக்கரைமுத்துவின் குடும்பத்தினர் நடத்தி வரும் சட்டப் போராட்டத்துக்கு திமுக துணை நிற்கும். இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயி உடலை வாங்கச் செல்லி அவரது குடும்பத்தினருக்கு காவல்துறை கெடுபிடி அளிக்கிறது. துக்கம் விசாரிக்க வரும் உறவினர்களைத் தடுக்கின்றனர். வாகைகுளம் பகுதியில் நேற்று இரவு மின்சாரத்தை துண்டித்துள்ளனர்.
இது போன்று இடையூறுகள் அளிப்பதை நிறுத்த வேண்டும். விவசாயி அணைக்கரை முத்து உயிரிழப்புக்குக் காரணமான வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை முறையாக நடைபெற வேண்டும்” என்றார்.