

விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 37 குழந்தைகள், டாஸ்மாக் ஊழியர்கள் 10 பேர் மற்றும் ஒரு விஏஓ உள்பட 445 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் 1 முதல் 14 வயதுக்கு உட்பட்ட 37 குழந்தைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு வயது குழந்தை இருவரும், 3 வயது குழந்தைகள் 3 பேரும், 4 வயது குழந்தைகள் 6 பேரும் அடங்குவர்.
அதோடு, நரிக்குடி கிராம நிர்வாக அலுவலரும், விருதுநகரில் டாஸ்மாக் ஊழியர்கள் 10 பேரும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இன்று ஒரே நாளில் 445 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,935 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், விருதுநகர் மாவட்டத்தில் 3,290 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 3,588 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 57.