Published : 27 Jul 2020 04:22 PM
Last Updated : 27 Jul 2020 04:22 PM

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் புதைந்து கிடக்கும் மர்ம முடிச்சு அதிர்ச்சியளிக்கிறது: திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் 

சென்னை

தவறாகக் கணக்கிடப்பட்ட மின் கட்டணத்தில் 50 சதவீதத்தை ரத்து செய்து மீதித்தொகையினை, எளிய தவணைகளில் செலுத்துவதற்கான வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்திட வேண்டும் என்றும்; ஏழை எளிய மக்களுக்கு மாநில அரசு ரூ.5000 மத்திய அரசு ரூ.7500-ம் நிவாரணம் வழங்க வேண்டும், நிவாரணப் பணம் அவர்களுக்கு வாங்கும் சக்தியை உருவாக்கி, பொருளாதார சுழற்சிக்கு உதவிடும் என திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

கரோனா மரணங்கள் உள்ளிட்ட முக்கியத் தரவுகளை மறைத்த அதிமுக அரசுக்குக் கண்டனம்:

தொடக்கத்திலிருந்தே, முதல்வரிடமும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடமும், கரோனா பெருநோய்த் தொற்று பரவல் குறித்து வெளியிடுவதிலும் சொல்வதிலும் ஒரு வகையான தயக்கம் நீடித்து வருகிறது; மருத்துவ விஞ்ஞானிகள் பலரும் சமூகப் பரவல் என்று கருத்து அறிவித்ததற்குப் பிறகும் அதை ஏற்றுக் கொள்வதிலே தடுமாற்றம் காணப்படுகின்றது.

அதனால், சரியான தரவுகளே முறையான திட்டமிடலுக்கும், சிகிச்சைக்கும் அடிப்படை என்பதை மறந்து, கரோனாவின் ஒவ்வொரு படிநிலையிலும் எண்ணிக்கைகளைக் குறைப்பதும் மறைப்பதுமான செயல்களில் ஈடுபட்டு, குழப்பங்களையும் குளறுபடிகளையும் உருவாக்கி வருகின்றனர்.

பரிசோதனைகள் உள்ளிட்டவற்றின் எண்ணிக்கையை நாள்தோறும் மாவட்ட வாரியாக வெளியிடுக என்று கோரிக்கை விடுத்தும் அதற்கு அரசு செவிமடுக்கவில்லை. கரோனாவால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பலமுறை எழுப்பப்பட்டதற்குப் பிறகு அதை ஆராய்வதற்கு மருத்துவர்கள் குழு ஒன்றை அமைத்தார்கள். அந்தக் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் 444 மரணங்கள் கணக்கிடப்படவில்லை என்ற உண்மை வெளிவந்துள்ளது.

அதன் மூலம் மரணங்கள் பற்றித் திரும்பத் திரும்ப சொன்ன பொய்யையே சொல்லிக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை நாட்டு மக்கள் இப்போது அறிந்து கொண்டுவிட்டார்கள். அதிமுக அரசு இதுவரை, கரோனா மரணங்கள் தொடர்பான எண்ணிக்கையில் போட்ட குளறுபடிகளுக்கு திமுக தலைமையிலான அனைத்துக்கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

கரோனா மரணங்களைப் போல, ஒவ்வொன்றையும் உட்புகுந்து ஆழமாக விசாரித்துப் பார்த்தால், இன்னும் எத்தனையோ குளறுபடிகள் வெளிச்சத்திற்கு வரும். ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதைப்போல், மரணங்களில் சொல்லிவந்த பச்சைப் பொய், அரசு தரும் அனைத்துத் தரவுகளிலுமே கலந்திருக்கும் என்ற அய்யப்பாட்டை உறுதிப்படுத்துகிறது. குளறுபடிக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு.

கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளான 10 பேரில் 7 பேர் குணமாகி வீடு திரும்புகிறார்கள் என்று கூறும் அதிமுக அரசு- குணமாகி வீடு திரும்பிய 1.40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குறித்த பதிவேடு ஏதுமில்லாமல் இருப்பது, அந்த 1.40 லட்சம் பேரில் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு குணமானவர்கள் எத்தனை பேர்? அதற்கு தனியாக பதிவேடு இருக்கிறதா? வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமானவர்கள், மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியோர் ஆகியோரில் எத்தனை பேர் மரணம் அடைந்திருக்கிறார்கள் என்பது போன்ற விவரங்களை மக்களுக்கு அதிமுக அரசு தெரிவிக்காமல் மறைத்து வருகிறது.

இத்தகைய குளறுபடிகள் வேண்டுமென்றே செயற்கையாக ஆளுந்தரப்பினரால் உருவாக்கப்பட்டவை என்று திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் முதலமைச்சர் மீது குற்றம் சாட்டுகிறது.

குழம்பிய குட்டையில் தானே மீன் பிடிக்க முடியும்? கரோனா பேரிடரின் ஆரம்பகாலம் முதலே, தேவையான மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதில், ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையான முறைகேடு வெளிச்சத்திற்கு வந்தும், அதுகுறித்து அதிமுக அரசு சிறிதும் வெட்கம் கொள்ளவில்லை. இந்தக் கொள்ளை நோயிலும், திட்டமிட்டு கொள்முதல் முறைகேடுகளைச் செய்த அதிமுக அரசுக்கு அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

அரசின் ஆணவ அலட்சியப் போக்கினால்- தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களிலும்- மாவட்டங்களின் கிராமங்களிலும், கரோனா நோய்த் தொற்று 2 லட்சத்தை நெருங்கி விட்டது; இறப்பு 3200-யைத் தாண்டி விட்டது. சென்னையில் 1 லட்சத்தைத் தொடவிருக்கிறது. மீதியுள்ள 36 மாவட்டங்களில் கரூர் தவிர - 35 மாவட்டங்களில் கரோனா நோய்த் தொற்று குறைந்தபட்சம் 500க்கும் அதிகபட்சமாக 10 ஆயிரத்திற்கும் மேலுமாக அதிகரித்து நாள்தோறும் மக்களின் அன்றாட வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தில் இட்டு நிரப்ப முடியாத வெறுமை ஏற்பட்டு மிகப் பெரிய கேள்விக்குறி தோன்றிவிட்டது.

மருத்துவமனை வசதிகள், மருத்துவப் படுக்கை வசதிகள், வெண்டிலேட்டர்களில் இருப்பவர்கள், நோய்த் தொற்றுக்கு உள்ளானோர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் அனைவரின் கணக்கிலுமே அதிமுக அரசிடம் ஒளிவுமறைவற்ற வெளிப்படைத்தன்மை இல்லை; எல்லா நடவடிக்கைகளுமே ஒரு மர்ம முடிச்சுக்குள் சுருண்டு கிடக்கிறது என்பதை இந்தக் கூட்டம் பேரதிர்ச்சியுடன் பதிவு செய்கிறது.

நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு 31.7.2020 அன்று நிறைவடையும் நிலையில், இப்போதாவது, தீயாய்ப் பரவிவரும் கரோனா நோய்த் தொற்றில் மிகுந்த தீவிரத்துடனும்- அதிக அக்கறையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் அதிமுக அரசு செயல்பட்டு- மக்களை இந்த நோய்ப் பேரிடரிலிருந்து பாதுகாத்திட- குறிப்பாக மாவட்டங்களிலும் கிராமங்களிலும் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்திட அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுத்திட வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

வற்றிவிட்ட வாழ்வாதாரத்தை மீட்க, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் பண உதவி செய்திடுக

மார்ச் மாதம் துவங்கிய ஊரடங்கு கடந்த 125 நாட்களாக இன்றுவரை தொடர்கிறது. இன்னும் எத்தனை நாளைக்கு இந்த நிலை நீடிக்கும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்று முதல்வரே கூறிவிட்ட நிலையில், மக்கள்- தனியார் அலுவலக வேலைக்கோ, தொழில் நிறுவன வேலைக்கோ, தினக்கூலித் தொழிலுக்கோ முழுமையாகச் செல்ல முடியாமல் இன்னும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மார்ச் மாதம் நிலைகுலைந்த அவர்களது வாழ்வாதாரம் இன்னும் நிமிரவில்லை. இதனால் தற்கொலைகள் தலைதூக்குகின்றன. வேலை இழப்பைத் தாங்க முடியாத குடும்பங்கள் வறுமையின் கோரப் பிடியில் சிக்கி பசி – பட்டினிக்குத் தள்ளப்பட்டுள்ளன. சட்டம் - ஒழுங்குப் பிரச்சினைகள் தலைவிரித்தாடும் போக்கும்- சுயதொழில், சிறு குறு நடுத்தரத் தொழில் புரிவோர் அனைவருமே செல்லும் திசை தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள்.

வீட்டு வாடகை கொடுக்க முடியாமல், மின் கணக்கீட்டு குளறுபடிகளால் மிக அதிகமாகக் கணக்கிடப்பட்ட மின் கட்டணத்தைச் செலுத்த இயலாமல்- இதுவரை அனுபவிக்காத அல்லல்களுக்கு ஆளாகி அவதியுறும் சூழல் மாநிலம் முழுவதும் மிக வேகமாக உருவாகி வருகிறது.

ஆகவே மக்களின் வாழ்வாதாரத்திற்கு பொருளாதார ரீதியாக உடனடியாக உதவிட வேண்டியது, பொறுப்புள்ள அரசின் கடமை என்று கருதித்தான் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏற்கனவே ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் ரொக்கமாக நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் - மத்திய அரசு 7500 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

ஆனால் அதை அரசு ஏற்க மறுத்ததால், இன்றைக்கு விவசாயத் தொழிலாளர்கள், அமைப்புசாராத் தொழிலாளர்கள், தெருவோரக் கடை வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டு விரக்தியின் விளிம்பிலே நிற்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு இழந்து விட்ட வாழ்வாதாரத்தை ஓரளவுக்கேனும் மீட்டிட- மத்திய மாநில அரசுகள் ரொக்கமாக நிதியுதவி உடனடியாக அளித்திட வேண்டும்.

தவறாகக் கணக்கிடப்பட்ட மின் கட்டணத்தில் 50 சதவீதத்தை ரத்து செய்து மீதித்தொகையினை, எளிய தவணைகளில் செலுத்துவதற்கான வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்திட வேண்டும் என்றும்; ஏழை எளியோர் கையில் கொடுக்கப்படும் நிவாரணப் பணம் அவர்களுக்கு வாங்கும் சக்தியை உருவாக்கி, பொருளாதார சுழற்சிக்கு உதவிடும் என்பதை உணர வேண்டும் என்று அதிமுக அரசை அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

பாதிக்கப்பட்ட- உயிர்த் தியாகம் செய்த “கரோனா முன்கள வீரர்களுக்கான” நிதியுதவி வழங்கிடுக.

கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு மற்றும் சிகிச்சையில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், மக்கள் நல்வாழ்வுத்துறையின் ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் முன்கள வீரர்களாக நின்று இரவு பகலாக மகத்தான பணியை ஆற்றி வருவதற்கு இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் பாராட்டுதலையும், வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

முன்களப் பணியாளர்களின் பாதுகாப்பில் இந்த அரசு போதிய கவனம் செலுத்தி அவர்களுக்குரிய பாதுகாப்பு உபகரணங்களை இன்னும்கூட முழுமையாக வழங்கிடவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் இந்தக் கூட்டம், வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்படும் முன்களப் பணியாளர்களுக்கு போதிய உணவு, தங்கும் வசதி உள்ளிட்டவற்றையும் செய்யத் தவறியிருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.

முன்களப் பணியாளர்கள் நோய்த் தொற்றுக்குள்ளானால் அவர்களுக்கு 2லட்சம் ரூபாய் நிதியுதவியும், உயிர்த் தியாகம் செய்தால் 50 லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படும் என்று அதிமுக அரசு அறிவித்தது. முன்களப் பணியாளர்கள் எத்தனை பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது - இறந்தவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த புள்ளிவிவரங்களை வழக்கம் போல் அதிமுக அரசு இதுவரை அதிகாரபூர்வமாக வெளியிடாமல் மறைத்து வருவது வேதனைக்குரியது.

கரோனா பணியில் உயிர்த் தியாகம் செய்த முன்கள வீரர்களுக்கு, அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், நேர்ந்துவிட்ட இழப்பினால் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தார்க்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

கரோனாவால் பாதிக்கப்பட்டோர், உயிர்த் தியாகம் செய்தோரின் பட்டியலை அதிகாரபூர்வமாக வெளியிட்டு - அவர்களுக்காக அறிவிக்கப்பட்ட நிதியை மேலும் தாமதப்படுத்தாமல் வழங்கிட வேண்டும் என்றும், முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் உரிய அடிப்படை பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் அதிமுக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”.

இவ்வாறு திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x