வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிந்தால்தான் உடலை வாங்குவோம்: உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தினர் திட்டவட்டம்

வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிந்தால்தான் உடலை வாங்குவோம்: உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தினர் திட்டவட்டம்
Updated on
1 min read

வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தால் தான் உடலை வாங்குவோம் என உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அணைக்கரை முத்து (65).

இவரது விவசாய நிலத்தைச் சுற்றி மின் வேலி அமைத்திருந்ததாகக் கிடைத்த தகவலின்பேரில், கடையம் வனத்துறையினர் கடந்த 22-ம் தேதி இரவு அணைக்கரை முத்துவை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், அணைக்கரை முத்துவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறி, தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அணைக்கரை முத்துவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர். அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் கார்த்திகேயன் விசாரணை நடத்தி வருகிறார்.

அணைக்கரை முத்து குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மரணத்துக்குக் காரணமான வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 23-ம் தேதி முதல் அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை அணைக்கரை முத்து உடலைப் பெற முடியாது என்று மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், அணைக்கரை முத்து குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இருப்பினும் வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்காததால் உடலை வாங்க மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் இன்று 5-வது நாளாக போராட்டம் நீடித்தது. அணைக்கரை முத்துவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் வருவாய்த் துறையினரும், காவல்துறையினரும் ஈடுபட்டனர். ஆனால் அவரது குடும்பத்தினர் சமாதானத்தை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அணைக்கரை முத்துவின் மகள் வசந்தி நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழக முதல்வர் எங்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதியுதவி வழங்குவவதாக அறிவித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

எங்கள் அனுமதியை பெறமால் உடற்கூறாய்வு செய்தது சந்தேகத்தை அளிக்கிறது. எங்கள் தந்தை மரணத்துக்குக் காரணமான வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, உரிய நியாயம் வழங்க வேண்டும். அப்போது தான் உடலை வாங்குவோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in