

நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்திட வேண்டும் என்றும், இந்த ஆண்டு முதல் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவக் கல்விக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உடனடியாக அவசரச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றிட வேண்டும் என திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஸ்டாலின் தலைமையில் இன்று நடந்த திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
“ பிற்படுத்தப்பட்டோர் - பட்டியலினத்தோர் - பழங்குடியினர் இட ஒதுக்கீடுகளை முழு வீச்சில் செயல்படுத்திடுக:
மண்டல் கமிஷன் பரிந்துரைத்து – ‘சமூகநீதிக் காவலர்’ மறைந்த வி.பி.சிங் அறிவித்து - உச்சநீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வால் உறுதி செய்யப்பட்டும் பிரதமர் நரசிம்ம ராவ் அவர்கள் நடைமுறைப்படுத்திய மத்திய அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான 27 சதவீத இடஒதுக்கீடு பா.ஜ.க. ஆட்சியில் முறையாக வழங்கப்படாமல் வஞ்சிக்கப்பட்டு வருவதை இக்கூட்டம் மிகுந்த வேதனையுடன் பதிவு செய்கிறது.
மத்திய பாஜக அரசு கல்வி, வேலைவாய்ப்பில் 27 சதவீத இடஒதுக்கீட்டைச் சீர்குலைக்க திட்டமிட்டுச் செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது. மருத்துவக் கல்வியில் தமிழகத்திலிருந்து மத்தியத் தொகுப்பிற்கு ஒதுக்கப்படும் மருத்துவ மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களில் தமிழகத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு 50 சதவீதமும், பட்டியலினச் சமுதாயத்திற்கு 18 சதவீதமும் வழங்காமல் பா.ஜ.க. அரசு தொடர்ந்து பிடிவாதமாக மறுத்து வருவதற்கு இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
பட்டியிலன மக்களுக்கு 15 சதவீதம் மட்டுமே வழங்கி 3 சதவீத இட ஒதுக்கீட்டை மறுப்பது அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம்
அரசியல் சட்டபூர்வமான இடஒதுக்கீட்டையும் நிராகரித்து- இப்போது “க்ரீமி லேயர் வருமான வரம்பைக் கணக்கிட “நிகர சம்பளத்தை” எடுத்துக் கொள்வோம் என்று மத்திய பா.ஜ.க. அரசு பிரச்சினை செய்வது சமூகநீதிக்கு எதிரானது, அரசியல் சட்டம் வரையறுத்துள்ள முகவுரை மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று இந்தக் கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.
ஆகவே சமூகநீதியை நிலைநாட்டிட தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மட்டுமின்றி- அகில இந்திய அளவில் உள்ள அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம், “பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு மருத்துவக் கல்வி இடங்களில் 50 சதவீத இடங்களையும், பட்டியலின மக்களுக்கு 18 சதவீத இடங்களையும் வழங்கிட வேண்டும்” .
க்ரீமிலேயர் வருமானத்தில் "நிகர சம்பளத்தை" எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், மத்திய அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மத்திய அரசாணைகளின்படி அறிவித்துள்ள இடஒதுக்கீடு சதவீதங்களை முழுமையாகச் செயல்படுத்திட தனியாக கண்காணிப்பு அமைப்பு ஒன்றினை உருவாக்கிட வேண்டும் என்றும் மத்திய பாஜக அரசை, அனைத்துக் கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டம் - சமூகநீதி பிறந்து தவழ்ந்து வளர்ந்த பெருமைக்குரிய தமிழ் மண்ணிலிருந்து கேட்டுக் கொள்கிறது.
“நீட்” தேர்வை ரத்து செய்க! “ப்ளஸ் 2” மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கு மாணவர் சேர்க்கை நடத்திடுக!
“நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும்” என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு, ஆர்வமின்மை மற்றும் தொடர் நடவடிக்கை இன்மை ஆகியவற்றின் காரணமாக, குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற முடியாமல் கோட்டை விட்டு- அடுத்த வாய்ப்பாக அந்த மசோதாக்களை திரும்பவும் நிறைவேற்றி அனுப்பி சட்டமாக்கும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் அதிகாரத்தையும் பறிகொடுத்த அதிமுக அரசு, தற்போது அந்த “நீட்” தேர்வு மசோதாக்கள் குறித்தே பேசுவதை அறவே கைவிட்டு விட்டது.
அதை மறக்கச் செய்திடும் நோக்கில், “நீட் தேர்வு எழுதி வெற்றி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குகிறோம்” என்று அமைச்சரவையில் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் அந்த அமைச்சரவை முடிவு அரசு ஆணையாக இதுவரை வெளியாகவில்லை. அதுகுறித்து இதுவரை முதல்வரோ, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரோ கருத்து எதுவும் தெரிவிக்கவும் இல்லை.
கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து - மாணவி அனிதா உள்ளிட்ட மாணவ - மாணவிகளின் தற்கொலைக்குக் காரணமான “நீட்” தேர்வை பாஜக அரசும் கைவிடுவதாக இல்லை. பாஜகவின் கோபத்திற்கு ஆளாகிவிடுவோமோ என்ற பயத்தில், அதிமுக அரசும் இதற்குமேல் அதுபற்றி வாய் திறந்து வலியுறுத்துவதாகத் தெரியவில்லை என்பதை இந்தக் கூட்டம் மிகுந்த வேதனையுடன் பதிவு செய்கிறது.
இந்நிலையில், “கரோனா பேரிடர் காலத்திலும் செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வு நடக்கும்” என்ற மத்திய அரசின் அறிவிப்பைக்கூட எதிர்த்து இன்று வரை முதல்வர் வழக்கம்போல கடிதமும் எழுதவில்லை; கோரிக்கையும் விடுக்க மனமில்லை. தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு 2 லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், செப்டம்பர் 13ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள “நீட்” தேர்வை மத்திய பாஜக அரசு ரத்து செய்திட வேண்டும் என்றும், “இந்த ஆண்டு முதல் பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவக் கல்விக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்” என்று உடனடியாக அவசரச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றிட வேண்டும் என்று அதிமுக அரசையும் இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு வரவேற்பு:
மாநிலங்கள் "மத்தியத் தொகுப்பிற்கு" ஒப்படைக்கும் மருத்துவக் கல்விக்கான (எம்.பி.பி.எஸ்; பி.டி.எஸ், முதுநிலை மருத்துவம்) இடங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இடஒதுக்கீடு பெறும் அரசியல் சட்ட உரிமை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, சமூகநீதி அத்தியாயத்தில் மிக முக்கியமாகவும், சமூகநீதியை நிலை நாட்டுவதில் எப்போதுமே ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் முன்னணியில் நிற்கும் என்பதற்கும் மற்றுமொரு சான்றாகும்.
இந்தச் சமூகநீதிப் போராட்டத்தை நடத்தி பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் உரிமையை நிலைநாட்டியுள்ள திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் இந்தக் கூட்டம் தனது பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
"இடஒதுக்கீடு அளிக்க முடியாது" என்ற மத்திய அரசின் வாதத்தை நிராகரித்து, பிற்படுத்தப்பட்ட, மிகவும பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க கமிட்டி அமைத்து முடிவெடுக்க வேண்டும் என்ற மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவினை ஏற்று- நீதிமன்றம் அளித்துள்ள மூன்று மாத காலம்வரை காத்திராமல் உடனடியாக ஒரு கமிட்டியை அமைத்து, உரிய முடிவெடுத்து மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இந்தக் கல்வி ஆண்டிலேயே தமிழ்நாடு மத்தியத் தொகுப்பிற்கு ஒதுக்கும் இடங்களில் தமிழக அரசு சட்டப்படி பின்பற்றிவரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டையும், பட்டியலின மக்களுக்கு 18 சதவீத இடஒதுக்கீட்டையும்- பழங்குடியின மக்களுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீட்டையும் வழங்கிட வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” .
இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.