

மத்திய அரசின் சூழலியல் தாக்க மதிப்பீட்டு சட்ட வரைவு 2020 மசோதாவால் காவிரி டெல்டா பாதுகாப்பு மண்டலம் என்ற அரசாணையே பறிபோகும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"காற்று மாசு ஏற்பட்டும், பருவகால மாற்றங்கள் மூலமும் மனிதர்கள், கால்நடைகள் உள்ளிட்ட விலங்கினங்களுக்குப் பேரழிவு ஏற்பட்டுவிடக் கூடாது, இயற்கை வளங்கள் அழிந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கிய வழிகாட்டுதல்களுடன் கூடிய சூழலியல் தாக்க மதிப்பீடு (Environment IMpact Assessment) என்ற சட்டம் 1994-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
அதன்பின்னர் சில திருத்தங்களுடன் சூழலியல் தாக்க மதிப்பீடு 2006 சட்டம் மாற்றி அமைக்கப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது. அதில் நீதிமன்றங்களின் தலையீடுகளைத் தடுத்து நிறுத்தவும், மக்கள் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்படாமலேயே எந்தவொரு திட்டத்தையும் ஒப்பந்தம் பெறும் நிறுவனங்கள் செயல்படுத்தக் கூடிய வகையில் மாறுதல்கள் செய்யப்பட்டு புதிய சட்ட வரைவு மசோதா கடந்த மார்ச் மாதம் 12-ம் தேதி மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
இது உலகப் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், மக்களின் கருத்துரிமையைப் பறிக்கும் வகையிலும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாகவும் கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் மாநில அரசுகளின் உரிமைகள் பறிபோகும். இந்த மசோதா மூலம் ஹைட்ரோகார்பன், மீத்தேன், பாறை எரிவாயு எடுப்பது போன்ற பேரழிவுத் திட்டங்களுக்கு மக்கள் கருத்தறியாமலே, மத்திய அரசு அனுமதி வழங்க முடியும்.
இந்த 2020 வரைவு மசோதா மூலம், ஒப்பந்தம் பெறும் நிறுவனமே வல்லுநர் குழு அமைத்துக் கொண்டு, குறிப்பிட்ட திட்டம் குறித்த சூழலியல் தாக்க அறிக்கை தயாரிப்புகளை, ஆய்வுகளை நடத்த அனுமதி அளிக்கிறது. அதன் அறிக்கையின்படி சுற்றுச்சூழல் தடையின்மை அனுமதி வழங்க வேண்டும். அவசரம் என என்னும் பட்சத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியின்றி மத்திய அரசே அனுமதி கொடுத்து விடலாம்.
இந்த இரண்டு நடைமுறைகளுமே எந்த விதத்திலும் மக்கள் நலனுக்கு ஆதரவானதாகவோ, சூழலியல் பாதுகாப்புக்கு உகந்ததாகவோ இருக்காது என்பது சூழலியல் ஆர்வலர்களின் முதன்மையான குற்றச்சாட்டாக உள்ளது.
மேலும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தன்னுடைய செயல்பாடுகள் குறித்த அறிக்கையை ஒவ்வொரு தொழில் நிறுவனமும் சமர்ப்பிக்க வேண்டும் என்றிருக்கும் விதிமுறையை மாற்றி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சமர்ப்பிப்பது போதுமானது என்று புதிய சட்டவரைவு மசோதாவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு வழங்கப்படும் கால அவகாசம் அந்தத் திட்டத்திலுள்ள சூழலியல் மற்றும் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகளை மூடிமறைப்பதற்கு வாய்ப்பளிக்கும் என்றும் சூழலியலாளர்கள் அஞ்சுகின்றனர். சதுப்பு நிலக் காடுகளில் மணல் போட்டு சமன்படுத்துவதற்கு அனுமதியோ அல்லது சூழலியல் தாக்க மதிப்பீடோ செய்யத் தேவையில்லை என்ற வாய்ப்புகள் இந்த வரைவில் இணைக்கப்பட்டுள்ளன.
இது விளைநிலங்களை விவசாயிகளிடமிருந்து அபகரிக்க வழிவகுக்கும் என சூழலியாளர்கள் மற்றும் விவசாயிகள் அச்சப்படுகிறார்கள். வறண்ட புல்வெளிக் காடுகள், இந்தப் புதிய சட்ட வரைவினால் தரிசு நிலங்களாகக் கணக்குக் காட்டப்பட்டு, பெரும் தொழில் நிறுவனங்களுக்கு தாராளமாகத் தாரை வார்க்கப்படும்.
மத்திய, மாநில அரசுகளின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களின் அனுமதி பெறாமலேயே பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதியளித்து, மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.
மேலும் இம்மசோதா சட்டமாக்கப்படும் பட்சத்தில் காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவிப்பு செய்து மாநில அரசு வெளியிட்டுள்ள அரசாணை பறிக்கப்படும் பேராபத்து ஏற்படும். எனவே இம்மசோதா குறித்து தமிழக முதல்வர் தனது அரசின் கொள்கை நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும்.
மசோதா மீதான மக்கள் கருத்துக் கேட்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா தாக்குதலால் உலகமே முடங்கி உள்ள நிலையில் கருத்துக் கேட்புக்கான கால அவகாசத்தை மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை நீட்டித்துத் தர வேண்டும்.
மக்கள் மற்றும் சூழலியல் வல்லுநர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் வகையில் மாற்றங்கள் செய்தால் மட்டுமே சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு மசோதா 2020-ஐ நடைமுறைப்படுத்த வேண்டும், இல்லையேல் கைவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம்."
இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.