கரோனா தொற்றைத் தடுக்க இலவச முகக்கவசம் வழங்கும் திட்டம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

கரோனா தொற்றைத் தடுக்க இலவச முகக்கவசம் வழங்கும் திட்டம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
Updated on
1 min read

தமிழ்நாட்டில் உள்ள 2.08 கோடி குடும்ப அட்டைதாரர்களின் 6.74 கோடி குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு விலையில்லா தரமான மறு பயன்பாட்டு முகக்கவசங்களை நியாய விலைக் கடைகளின் மூலம் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (27.7.2020) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், முதற்கட்டமாக பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் (பெருநகர சென்னை மாநகராட்சி தவிர) வசிக்கும் 69.09 லட்சம் குடும்பங்களுக்கு 4.44 கோடி முகக்கவசங்கள் நியாய விலைக் கடைகள் மூலமாக வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
தொடங்கி வைக்கும் அடையாளமாக 5 நபர்களுக்கு முகக்கவசங்களை வழங்கினார்.

மத்திய அரசின் கரோனா வைரஸ் தடுப்பு மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில், அனைத்துப் பொது இடங்கள் மற்றும் பணியிடங்களிலும், பிற இடங்களுக்குப் பயணிக்கும்போதும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, கரோனா வைரஸ் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா தரமான மறு பயன்பாட்டு முகக்கவசங்கள் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள 2.08 கோடி குடும்ப அட்டைதாரர்களின் 6.74 கோடி குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு விலையில்லா தரமான மறு பயன்பாட்டு முகக்கவசங்கள் நியாய விலைக் கடைகளின் மூலம் வழங்கும் வகையில், முதற்கட்டமாக பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் (பெருநகர சென்னை மாநகராட்சி தவிர) வசிக்கும் 69.09 லட்சம் குடும்பங்களுக்கு 4.44 கோடி விலையில்லா தரமான மறு பயன்பாட்டு முகக்கவசங்கள் 30 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் (பெருநகர சென்னை மாநகராட்சி தவிர) வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகளின் மூலம் முகக்கவசங்கள் வழங்கும் திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படும்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிருவாக ஆணையர் / முதன்மைச் செயலாளர் பணீந்திர ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்”.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in