

நிலுவையில் உள்ள 4 மாத ஊதியத்தை வழங்க வேண்டும், ஓய்வூதியம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் நகராட்சி ஊழியர்கள் இன்று (ஜூலை 27) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு புதுச்சேரி அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும், காரைக்கால் நகராட்சி ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 4 மாத ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், கிராமப் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், உள்ளாட்சி ஊழியர்களுக்கு வெளியிட்டுள்ள பொதுவான பணிநிலை அரசாணையை அமல்படுத்தி உள்ளாட்சித் துறை மூலமாக ஊழியர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் நகராட்சி ஊழியர்கள் ஒரு மணி நேரம் பணியைப் புறக்கணித்து அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்குக் காரைக்கால் நகராட்சி ஊழியர் சங்கத் தலைவர் சண்முராஜ் தலைமை வகித்தார். காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கவுரவத் தலைவர் ஜெய்சிங், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன், காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளனத் தலைவர் அய்யப்பன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.