Published : 27 Jul 2020 02:22 PM
Last Updated : 27 Jul 2020 02:22 PM

அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி கோவில்பட்டி காவல் நிலையங்களை இந்திய கம்யூனிஸ்ட் முற்றுகை

சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் உள்ள காவல் நிலையங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு, புகார் மனு வழங்கினர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.அழகுமுத்துபாண்டியன், நகர செயலாளர் அ.சரோஜா மற்றும் ஏராளமானோர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் அவர்கள் காவல்நிலையத்தில் வழங்கிய மனுவில், சமூக ஊடகங்களான முகநூல், வாட்ஸ்அப், டுவிட்டர் உள்ளிட்டவைகளில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் மீது அவதூறு பரப்பும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன.

கம்யூனிசம் வென்றே தீரும்... மார்கசீய வழியில்... என்ற முகநூல் பக்கத்தில், தனி நபர் ஒருவர் சமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகமாக பாலன் இல்லத்தின் படத்தை பதிவிட்டு, அதன் கீழ் அவதூறான செய்தியை வெளியிட்டுள்ளார். இதன் பின்னூட்ட பதிவிலும் பாலின சமத்துவப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் தொடர்பாக அவதூறாக பதிவுகளை பலர் பதிவு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மற்றொருவர் தனது முகநூல் பதிவில் விடுதலைப் போராட்ட வீரரும், அரசியல் இயக்கத்தின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் படத்தையும் பதிவிட்டு, அவதூறான வார்த்தைகளை பதிவிட்டுள்ளார்.

மக்களின் நன்மதிப்பை பெற்ற பொது வாழ்க்கை தலைவர்கள் மற்றும் ஜனநாயக இயக்கங்கள் குறித்து அவதூறு செய்திகளை பரப்புவதன் மூலம் சமூக விரோத கும்பல்கள், சமூக வாழ்வியல் பதற்றத்தையும், மோதலையும், வன்முறை கலகங்களையும் உருவாக்கி அதன் மூலம் சுயநல ஆதாயம் தேடும் கும்பல்களின் சதி செயல்கள் உள்ளன.

எனவே, குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் சமூக விரோத கும்பலை கண்டறிந்து, அவர்களை தண்டிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.

இதேபோல், வட்டச்செயலாளர் ஜி.பாபு தலைமையில் ஏராமானோர் கிழக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, புகார் மனு வழங்கினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x