Published : 27 Jul 2020 01:29 PM
Last Updated : 27 Jul 2020 01:29 PM

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு; மத்திய அரசு மேல்முறையீடு செய்யாது என நம்புகிறோம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை

மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. தீர்ப்பை மதித்து மத்திய அரசு மேல்முறையீடு செய்யாது என நம்புவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு கோரி தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், மத்திய கல்வி நிலையங்கள் அல்லாத நிலையங்களிலும் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்விதத் தடையும் இல்லை எனத் தீர்ப்பளித்துள்ளது.

3 பேர் கொண்ட குழு 3 மாதத்தில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். அடுத்த கல்வி ஆண்டு முதல் அது அமல்படுத்தப்படவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத் தீர்ப்பைப் பலரும் வரவேற்றுள்ள நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

“நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது ஜெயலலிதா பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 50 சதவீத ஒதுக்கீடு மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 19 சதவீத ஒதுக்கீடு என 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வாதம் செய்தார். பிரதமரும் ஒப்புக்கொண்டு, அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தி 9-வது அட்டவணையில் இணைக்கப்பட்டது. இதனால்தான் சமூக நீதி காத்த வீராங்கனை என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாராட்டப்பட்டார்.

மருத்துவப் படிப்பில் ஓபிசிக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படாததை எதிர்த்து அதில் நாம் வழக்குத் தொடுத்தோம். வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.

தீர்ப்பின்படி குழு அமைத்து 3 மாதத்தில் மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அருமையான ஒரு தீர்ப்பு. இது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என்று அதிமுக கருதி பாராட்டுகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு எவ்வித மேல்முறையீடும் செய்யாமல் தீர்ப்பை மதிக்கும் என நம்புகிறோம்”.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x