

கவனச்சிதறல்களைத் தவிர்த்து ஓரணியாகத் திரண்டு கரோனாவுக்கு எதிராகச் செயல்படுவோம் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று வாட்ஸ் அப்பில் வெளியிட்ட தகவல்:
''புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக இல.கணேசன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நான் மத்திய அரசில் இணையப்போவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இதுபோன்ற புரளித் தகவல்கள் நிறைய வந்துள்ளன. இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. தயவுசெய்து உறுதிப்படுத்தாத தகவல்களை யாரும் யாருக்கும் அனுப்பவோ, பரப்பவோ வேண்டாம்.
புதுச்சேரியில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதைப் புரிந்து கொள்ளுங்கள். இதை முழுவதும் அகற்ற அதிகபட்ச சமூக ஒத்துழைப்பு தேவை. ஒன்றிணைந்து பணியாற்ற மிகுந்த அர்ப்பணிப்பு தேவை. கவனச் சிதறல்களைத் தவிர்த்து ஓரணியாகத் திரண்டு கரோனாவுக்கு எதிராகச் செயல்படுவோம்.
கரோனா வைரஸைத் தடுக்கக்கூடிய மருந்தினைக் கண்டுபிடிக்கும் வரை அதை அலட்சியம் செய்யும் எந்தச் சிறிய செயலிலும் ஈடுபட வேண்டாம். இதனால் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும்.
புதுச்சேரியில் கோவிட் வைரஸின் சவால் மிக அதிகமாக உள்ளது. ஏனெனில் இது தமிழ்நாட்டு மக்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. தரவுப்படி புதுச்சேரியில் ஐந்தில் ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்கள் நலனுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் சுய ஒழுங்குடன் இருக்க வேண்டும். விதிகளை மீறினால் தண்டிக்கப்படுவோம் என்ற பயத்தில் செய்யக்கூடாது, உங்களுடைய பாதுகாப்புதான் இன்றியமையாதது.
மக்கள் தங்களுக்குத் தேவையான எந்த உதவிக்கும் 104 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தெரியப்படுத்த வேண்டும். அனைவருடைய ஒட்டுமொத்த பரஸ்பரப் புரிதல், ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்து செயல்பட்டால் புதுச்சேரியில் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.
ஆயுர்வேதத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஆயுஷ் மருந்துகளை வீட்டில் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் தங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும். கோவிட்டை எதிர்த்துப் போராடுவது ஒரு மக்கள் இயக்கமாக மாற வேண்டும்''.
இவ்வாறு கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார்.