Published : 27 Jul 2020 12:49 PM
Last Updated : 27 Jul 2020 12:49 PM

இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை: ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு கோரிய வழக்கில்  உயர் நீதிமன்றம் தீர்ப்பு 

மருத்துவப் படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு கோரி தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், மத்திய கல்வி நிலையங்கள் அல்லாத நிலையங்களிலும் ஒபிசி இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்விதத் தடையும் இல்லை எனத் தீர்ப்பளித்துள்ளது.

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக, திராவிடர் கழகம், திமுக, அதிமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 8-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகவும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் 27% இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், மருத்துவப் படிப்புகளில் அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற அனுமதிக்கலாம் எனவும், ஆனால், அந்த இட ஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி , நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். திமுக - பி.வில்சன், அதிமுக - ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பாமக - கே.பாலு, மார்க்சிஸ்ட் - ஸ்டாலின் அபிமன்யு, தனி மனுதாரர் ஒருவருக்கு தினேஷ்குமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அவர்கள் வாதத்தில், “உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் விதிப்படி, இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசு சட்டம் இயற்றாமல் இருந்தால் மட்டுமே மத்திய அரசு முடிவெடுக்க முடியும், மத்திய அரசு கவுன்சிலிங் நடத்தும் அமைப்பு மட்டுமே என்றும், இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம் உள்ளது” என்றும் வாதிட்டனர்.

கடந்த 4 வருடங்களில் 3,580 இடங்கள் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டன. இட ஒதுக்கீடு வழங்காததால் 2,700 -க்கும் மேற்பட்ட ஓபிசி தமிழக மாணவர்கள் இடம் பறிபோனது என திமுக தரப்பில் வில்சன் வாதிட்டார். இட ஒதுக்கீடு விவகாரத்தில் மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு திருடிக் கொண்டிருக்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.

தமிழக அரசுத் தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி, “தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு முறை இருக்கும்போது மத்திய அரசு 27% இட ஒதுக்கீடு வழங்குவது தவறானது. தமிழகத்தில்தான் அதிக அளவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளனர்.

ஒவ்வொரு மாநிலத்திலும் சாதிவாரியான மக்கள்தொகையின் அடிப்படையில் 50% என்ற இட ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம் என உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது. பட்டியலின, பழங்குடியினப் பிரிவினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கிவிட்டு, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு மறுப்பது சட்ட விரோதமானது" என்று வாதிட்டார்.

மாணவர்களின் நலன் கருதி வரலாற்றிலேயே முதல் முறையாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிராக உள்ளதாக திமுக வழக்கறிஞர் வில்சன் குறிப்பிட்டார்.

இந்திய மருத்துவக் கவுன்சில் தரப்பில் பி.ஆர்.ராமன், மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். மத்திய அரசு வாதத்தில், மருத்துவ மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றக் கூடாது என இந்திய மருத்துவக் கவுன்சில் விதி உள்ளதாகவும், மெரிட் எனப்படும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதே நேரத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியே எஸ்.சி./எஸ்.டி. மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாகவும், மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டிய அவசியமில்லை என்பதற்கான உயர்நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளதாகவும் மேற்கோள் காட்டப்பட்டது. அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் நிரம்பாமல் இருந்தால் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள் மாநில அரசுகளின் ஒதுக்கீடு முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற முந்தைய உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு ஏன் மத்திய அரசு கட்டுப்படவில்லை எனக் கேள்வி எழுப்பினர். பின்னர் வழக்கின் மீதான தீர்ப்பு ஜூலை 27-ம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்து தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இன்று தீர்ப்பு வெளியானது. தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் அமர்வு தீர்ப்பளித்தது.

தீர்ப்பு விவரம்:

“இட ஒதுக்கீடு வழங்குவதை உச்ச நீதிமன்றம் மட்டுமே முடிவெடுக்க முடியும் என்ற மருத்துவக் கவுன்சிலின் விளக்கத்தை ஏற்கமுடியாது, முப்பது ஆண்டுகள் முன்னர் எடுக்கப்பட்ட முடிவு என்பதால் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மத்திய அரசு இட ஒதுக்கீடு குறித்த சட்டத்தைக் கொண்டு வர முடியும்.

மாநிலங்கள் சமர்ப்பித்த இடங்களைப் பெற்றபோது அவற்றில் மத்திய கல்வி நிலையங்களில் அமல்படுத்த ஆட்சேபனை தெரிவிக்காத மருத்துவக் கவுன்சில் மத்திய கல்வி நிறுவனங்கள் இல்லாத பிற நிறுவனங்களில் ஆட்சேபிக்க முடியாது. மத்திய கல்வி நிலையங்கள் அல்லாத நிலையங்களிலும் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்விதத் தடையும் இல்லை.

மருத்துவக் கவுன்சில் விதிகளில் மாநில இட ஒதுக்கீடு பின்பற்றக் கூடாது என எந்த விதிகளும் இல்லை. மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகள் அனைத்தும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மாணவர்களின் குறைந்தபட்ச தகுதியை மத்திய அரசும், மருத்துவக் கவுன்சிலும் தீர்மானிக்க வேண்டும். மத்திய கல்வி நிறுவனங்கள் இல்லாத கல்வி நிறுவனங்களில் 50% இட ஒதுக்கீடு வழங்கலாம் என உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆனால், எவ்விதச் சட்டத்தையும் உருவாக்கவில்லை.

இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து முடிவெடுக்க மாநில அரசு மற்றும் மருத்துவ கவுன்சில் 3 பேர் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்து முடிவெடுக்க வேண்டும். 3 மாதத்தில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். இதன் முடிவை அடுத்த கல்வியாண்டு முதல் அமல் படுத்தவேண்டும்”.

இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு தீர்ப்பு விவரம் பின்னர் வெளியாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x