

மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி. இட ஒதுக்கீடு வழங்குவதில் சட்ட ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ தலையிடவில்லை என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்று திமுக வழக்கறிஞரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வில்சன் தெரிவித்துள்ளார்.
திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி
“தீர்ப்பின் முழு விவரம் 2 மணிக்கு வருகிறது. மொத்தத் தீர்ப்பு வந்தபின்னர் அதைப் படித்து முழுமையான விவரத்தை அளிக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தீர்ப்பு மிகப் பெரிய வெற்றி. திமுக தோழமைக் கட்சிகள், ஆளுங்கட்சி அனைவரும் இணைந்து தொடுக்கப்பட்ட வழக்கில் வெற்றி கிடைத்துள்ளது.
தீர்ப்பில் 3 நபர் கமிட்டி அமைக்கப்பட்டவேண்டும், சுகாதாரத்துறைச் செயலர், மருத்துவ கவுன்சில் செயலர் ஆகியோர் கொண்ட 3 நபர் கமிட்டியாக அமைக்கப்படவேண்டும். இந்த கமிட்டி இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து முடிவெடுக்கவேண்டும்.
3 மாத்தில் குழு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்கள். அகில இந்திய ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு உண்டு. மத்திய அரசு கொடுப்பதில் தடையில்லை எனத் தெரிவித்துள்ளனர். சட்ட ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ தடையில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் வாதத்தையும், மருத்துவ கவுன்சில் வாதத்தையும் நிராகரித்துள்ளனர். மூன்று மாதம் என்பது இறுதித் தேதி. இது தள்ளிப்போவதால் அடுத்த கல்வி ஆண்டில் இந்த முறையைக் கொண்டு வரவேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள்.
இந்தத் தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றம் சொன்னால்தான் கொடுப்பேன் என்று இனி சொல்ல முடியாது. என்ன செய்யப்போகிறோம் என்பதை மத்திய அரசுதான் இனி முடிவெடுக்க வேண்டும். மருத்துவக் கவுன்சிலுக்கு பல கேள்விகளை உயர் நீதிமன்றம் வைத்துள்ளது.
தமிழகம் எப்போதும் இட ஒதுக்கீட்டுக்கு முன்னோடி. இதைக் காண்பித்து மற்ற உயர் நீதிமன்றங்களுக்கும் தீர்ப்பை வாங்கலாம். லட்சக்கணக்கான பிற்படுத்தப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மிகுந்த பயனான ஒன்றாக இது அமையும். அவர்கள் வாழ்க்கைத்தரம் உயரும்”.
இவ்வாறு வில்சன் தெரிவித்தார்.