மணல் கொள்ளையால் அரசுக்கு ரூ.19,800 கோடி இழப்பு: ஸ்டாலின்

மணல் கொள்ளையால் அரசுக்கு ரூ.19,800 கோடி இழப்பு: ஸ்டாலின்
Updated on
1 min read

கணக்கில் வராத மணல் கொள்ளையால் மாநில அரசின் கஜானாவிற்கு வர வேண்டிய 19,800 கோடி ரூபாய் வரவில்லை என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: ''அதிமுக ஆட்சி மீது நம்பிக்கை இழந்த காரணத்தினால் தமிழகத்தில் ஆற்று மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தக் கோரி மக்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் அளவிற்கு வரலாறு காணாத மணல் கொள்ளை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தாமிரபரணி ஆற்று மணல் கொள்ளையைத் தடுக்கக் கோரி தாமிரபரணி ஆறு தூர்வாரும் மேலாண்மை குழுவினர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் பல முறை மனுக்கள் கொடுத்து விட்டார்கள். ஆனால், இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதில் வெறுத்துப் போன அந்தக் குழுவினர் இப்போது கோயில், மசூதி, தேவாலயங்களுக்குச் சென்று முறையிட்டு, பிரார்த்தனை செய்து எப்படியாவது மணல் கொள்ளையைத் தடுக்க "இறைவா, நீ தலையிட வேண்டும்" என்று கூறும் நிலைமை அதிமுக ஆட்சியில் அரங்கேறியிருக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களின் குறைகளைத் தீர்க்காமல் காலில் போட்டு மிதிக்கும் போக்கு அதிமுக ஆட்சியில் தொடர்கதையாகிறது. இந்த சட்டவிரோதமான மணல் கொள்ளையின் விளைவாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி, சாத்தான் குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் வற்றி, மிச்சமிருக்கின்ற நீர் ஆதாரங்களும் வறண்டு போகும் நிலை உருவாகியிருக்கிறது.

இங்கு மட்டுமல்ல தமிழகத்தின் பல பகுதிகளில் கொள்ளையோ கொள்ளை என்று நடக்கும் மணல் கொள்ளையை தடுக்காமல் அதிமுக அரசு கண்ணை மூடிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

பொதுப்பணித்துறையின் அளித்துள்ள தகவலின்படி நாள்தோறும் தலா 200 கன அடி மண் அளவு கொண்ட 5,500 முதல் 6000 லோடுகள் மண் எடுக்கப்படுகிறது என்று சொன்னாலும் நடப்பது வேறு மாதிரி இருக்கிறது. தினமும் தலா 400 கன அடி மண் அளவு கொண்ட 55,000 லோடுகளில் அள்ளப்படுகிறது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.

கணக்கில் வராத மணல் கொள்ளையால் மாநில அரசின் கஜானாவிற்கு வர வேண்டிய 19,800 கோடி ரூபாய் வரவில்லை. மணல் கொள்ளை மாநில அரசுக்கு நஷ்டத்தையும், மக்களின் நீர் ஆதாரத்திற்கு அபாயத்தையும் உருவாக்குகிறது.

எனவே, சட்டவிரோத மணல் கொள்ளை குறித்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டு, முதலமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in