

சுதந்திரப் போராட்ட தியாகிகள் வாஞ்சிநாதன், திருப்பூர் குமரன் ஆகியோரது பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அறிவித்தார்.
சட்டப்பேரவையில் செய்தி, விளம்பரம் மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை மானியக் கோரிக்கைகள் மீது இன்று விவாதம் நடந்தது. விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் கூறியதாவது:
எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் சுயநிதி அடிப்படையில் பகுதி நேர வகுப்புகள் தொடங்கப்படும். இந்நிறுவனத்தில் உள்ள திரைத் தொழில்நுட்பங்களுக்கான பட்டயப் படிப்புகள் இனி இளங்கலை - திரைப்படம் (பி.எஸ்சி - சினிமா) பட்டப் படிப்பாக மாற்றப்படும். இங்கு படிக்கும் மாணவர்களின் வசதிக்காக நவீன துணைக் கருவிகள் வாங்க ஆண்டுதோறும் ரூ.75 லட்சம் வழங்கப்படும்.
சுதந்திரப் போராட்ட தியாகிகள் வீர வாஞ்சிநாதன் (ஜூலை 17), திருப்பூர் குமரன் (அக்டோபர் 4) ஆகியோரது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும். தமிழ், ஆங்கிலத்தில் வெளியாகும் ‘தமிழரசு’ இதழ்கள் ரூ.25 லட்சத்தில் டிஜிட்டல் மயமாக்கப்படும். தமிழரசு அச்சகத்துக்கு ரூ.25 லட்சத்தில் டிஜிட்டல் பிரின்டர் வாங்கப்படும்.
எழுதுபொருள், அச்சுத் துறை அலுவலகங்கள், அரசு கிளை அச்சகங்களில் ரூ.2 கோடியில் தீத்தடுப்பு சாதனங்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும். மதுரை அரசு கிளை அச்சகத்துக்கு ரூ.1.50 கோடியில் நவீன இருவண்ண வெப் ஆப்செட் இயந்திரம் வாங்கப்படும்.
அரசு அச்சகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான இரவுப்படி ரூ.25-ல் இருந்து ரூ.50 ஆகவும், சலவைப்படி ரூ.60-லிருந்து ரூ.100 ஆகவும் உயர்த்தப்படும். அரசு அச்சகங்களில் ரூ.50 லட்சத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.