

ஊரடங்கு கால தடை உத்தரவில் பள்ளி, கல்லூரிகள் வரிசையில் சேர்க்கப்பட்டதால், வாகன பயிற்சிப் பள்ளிகளை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள 40 ஆயிரம் குடும்பங்கள் கடந்த 4 மாதங்களாக தவித்துவருகின்றன.
தமிழகத்தில் சுமார் 2,000 வாகன பயிற்சிப் பள்ளிகள் அரசு அனுமதியோடு இயங்கிவருகின்றன. ஒவ்வொரு பயிற்சிப் பள்ளியிலும் பயிற்சியாளர்கள், அலுவலக உதவியாளர் என பலர் பணிபுரிந்துவருகின்றனர். நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 40 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் இதில் அடங்கியுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு உத்தரவை ஏற்று கடந்த 4 மாதங்
களாக பயிற்சி அளிக்காமலும், பயிற்சிப் பள்ளிகளை திறக்காமலும் இருந்துவருகின்றனர். ஆனால், வாடகை கார்களில் ஓட்டுநர் தவிர்த்து மூவர் செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இருவர் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், தங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் தொடர்வதாக வேதனை தெரிவிக்கின்றனர் வாகன பயிற்சிப் பள்ளிகளின் உரிமையாளர்கள்.
இதுதொடர்பாக தமிழ்நாடு இலகுரக மற்றும் கனரக பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் சி.வி.சுந்தரேஸ்வரன் கூறியதாவது:
தடை உத்தரவில் பள்ளி, கல்லூரிகள் வரிசையில் வாகன பயிற்சிப் பள்ளிகளையும் சேர்த்துள்ளனர். இதனால், நாங்கள் இயங்க முடியவில்லை. மாதம் ஒன்றுக்கு ஒரு கார் மூலம் அதிகபட்சம் 12 நபர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கிறோம். அதுவும் ஒரே நேரத்தில் அனைவருக்கும் பயிற்சி அளிப்பதில்லை. வெவ்வேறு நேரங்களில்தான் பயிற்சி அளிக்கிறோம்.
உரிமம் பெறுவதில் சிக்கல்
எங்களிடம் பயிற்சி பெற்றால் மட்டுமே கனரக ஓட்டுநர்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் உரிமம் கிடைக்கும். இதனால், அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், எங்களிடம் ஏற்கெனவே நான்குசக்கர வாகன ஓட்டுநர் பயிற்சி முடித்தவர்களுக்கும் உரிமம் பெற்றுத்தர முடியாத நிலையில் உள்ளோம். ஒரு நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே வாகன பயிற்சி அளிப்பதால் கூட்டம் சேர வாய்ப்பில்லை. அரசு அறிவுறுத்தியுள்ள அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்ற தயாராக இருக்கிறோம். எனவே, கட்டுப்பாடுகளோடு வாகன பயிற்சி பள்ளிகள் இயங்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.
அரசின் கையில் முடிவு
தமிழக போக்குவரத்து ஆணையர் தென்காசி எஸ்.ஜவஹரிடம் கேட்டதற்கு, "வாகன பயிற்சி பள்ளிகளையும் பயிற்சி நிறுவனமாக கருதி தடை விதிக்கப்பட்டுள்ளது. தங்களை செயல்பட அனுமதி அளிக்கக் கோரி வாகன பயிற்சி பள்ளிகள் சார்பில் அளிக்கப்பட்ட வேண்டுகோள் கடிதத்தை அரசின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளோம். தடை உத்தரவில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்