பிளஸ் 2 பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு ஊரடங்கில் கைகொடுக்கும் மடிக்கணினி திட்டம்

வீட்டில் இருந்து பயில்வதற்காக தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளில் தங்களுக்கான பாடங்களை பதிவேற்றம் செய்து கொண்டதை பார்வையிடும் கடலூர் மாவட்டம்  குறிஞ்சிப்பாடி அரசுப் பள்ளி பிளஸ் 2  மாணவிகள்.
வீட்டில் இருந்து பயில்வதற்காக தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளில் தங்களுக்கான பாடங்களை பதிவேற்றம் செய்து கொண்டதை பார்வையிடும் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அரசுப் பள்ளி பிளஸ் 2 மாணவிகள்.
Updated on
1 min read

தமிழக அரசால் வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி கரோனா காலத்தில் பேருதவியாக உள்ளதாக அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி ஆண்டு இறுதியில் வழங்கப்பட்டு வந்த நிலையில், பிளஸ் 1 படிக்கும்போதே இதை வழங்கும் திட்டத்தை கடந்த 2018-19 கல்வியாண்டில் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

இந்த புதிய முறையால் கடந்த 2 ஆண்டுகளாக மேல்நிலைக் கல்வி பயிலும் பள்ளி மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். தற்போது கரோனா தொற்று காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு வீடியோ பதிவேற்றம் மூலம் கணினி வழியே பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்த வீடியோ பாடங்களை கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு மடிக்கணினிகளில் ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்துகொண்டிருந்தனர்.

இதுகுறித்து பள்ளி ஆசிரியர்களிடம் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது: முதல் பருவத்துக்கான பாடத் திட்டங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ தொகுப்பை மடிக்கணினியில் பதிவேற்றம் செய்து தருகிறோம். இதற்காக பாடத்திட்ட வாரியாக மாணவிகளை பள்ளிக்கு வரவழைத்து சமூக இடைவெளியுடன் பாடத்திட்டங்களை பதிவேற்றம் செய்து கொடுக்கிறோம்” என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 1 படிக்கும்போதே தமிழக அரசு மடிக்கணினி வழங்கியது, நெருக்கடியான இந்நேரத்தில் பேருதவியாக இருக்கிறது என்று இப்பகுதி மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா கூறும்போது, “கடலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவர்கள் 19,971 பேரில் 15,065 பேருக்கு வீடியோவை பதிவேற்றம் செய்து கொடுத்துள்ளோம். எஞ்சிய வர்களுக்கு ஓரிரு தினங்களில் பதிவேற்றம் செய்யப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in