ஒரத்தூர் நீர்த்தேக்கத்தில் ரூ.64 லட்சம் செலவில் புதிதாக 4 மதகுகள் அமைக்கும் பணி தீவிரம்

ஆரம்பாக்கம் பகுதியில் அமைக்கப்படும் மதகுகள்.   படம்: பெ. ஜேம்ஸ்குமார்
ஆரம்பாக்கம் பகுதியில் அமைக்கப்படும் மதகுகள். படம்: பெ. ஜேம்ஸ்குமார்
Updated on
1 min read

படப்பை அருகே ஒரத்தூர் நீர்த்தேக்கத்தில் இருந்து விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் ரூ.64 லட்சம் செலவில் புதிதாக 4 மதகுகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

படப்பை அடுத்த ஒரத்தூர் அருகே ஒரத்தூர் ஏரி மற்றும் ஆரம்பாக்கம் ஏரி ஆகியவற்றை இணைத்து, நிரந்தர வெள்ளத் தடுப்பு திட்டத்தின்கீழ் ரூ.55.85 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 763 ஏக்கர் பரப்பில், 750 மில்லியன் கன அடி கொள்ளளவு நீரைத் தேக்கிவைக்கலாம்.

ஒரத்தூர் நீர்த்தேக்கத்தில் இருந்து, அம்மணம்பாக்கம், படப்பை, மணிமங்கலம் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் இணைப்புக் கால்வாய் அமைக்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஏரிகளின் நீரை பயன்படுத்தி சுமார் 250 ஏக்கருக்கு விவசாயம் செய்யப்படுகிறது. இதற்கு வசதியாக ஏற்கெனவே இருந்த சேதமடைந்த மதகுகளை அகற்றிவிட்டு, ரூ.64 லட்சத்தில் புதிதாக 4 மதகுகள் ஒரத்துார் நீர்த்தேக்கத்தில் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் தே.குஜ்ராஜ் கூறும்போது, “ஒரத்தூர் நீர்த்தேக்கத்தில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்ல வசதியாக புதிதாக ரூ. 64 லட்சத்தில் ஒரத்தூர் பகுதியில் 2 மதகுகளும் ஆரம்பாக்கம் பகுதியில் 2 மதகுகளும் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் சுமார் 250 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in