

முகநூலில் பெண்களின் பெயரில் போலிகணக்கு தொடங்கி, அவர்களை தவறாக சித்தரித்து செல்போன் எண்ணை பகிரும் நபர் குறித்து ஏராளமான பெண்கள் புகார் அளித்து வருகின்றனர். இதுகுறித்து மகளிர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
சென்னை அம்பத்தூர் பகுதியில் வசிக்கும் ஒரு கல்லூரி மாணவியின் செல்போனுக்கு திடீரென புதிய நபர்களிடம் இருந்து அழைப்புகள் வரத் தொடங்கின. முகநூலில் அவரது பெயரில் தொடங்கப்பட்டிருந்த போலியான கணக்கில் அவரைதவறாக சித்தரித்து, அவரது செல்போன்எண்ணும் தரப்பட்டிருந்தது பின்னர் தெரியவந்தது. தினமும் இதுபோல ஏராளமான அழைப்புகள் வந்ததால் அந்த மாணவி கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
இதற்கிடையில், அதே பகுதியில் வேறு சில பெண்களும் இதேபோல பாதிப்புக்கு ஆளாகினர். ஆனால், பெற்றோர், கணவர்மற்றும் குடும்பத்தாரிடம் இதுகுறித்து பேசமுடியாமல் மன உளைச்சல் அடைந்தனர்.
புகாரை ஏற்கவில்லை
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், கரோனாபணிகளை காரணம் காட்டி அந்த புகாரைபோலீஸார் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர், தன் தோழிகளிடம் அந்த பெண் இதுபற்றி கூறியபோது, அவர்களில் சிலரும் இதுபோல பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. போலி முகநூல் கணக்கு மூலம் முகவரியை தெரிந்துகொண்டு, சில நபர்கள் வீட்டுக்கே வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் தற்போது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமியிடம் ஆன்லைன் மூலம் புகார் கொடுத்து வருகின்றனர். இந்த வழக்கை அம்பத்தூர் மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்கள் 75300 01100 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலம் புகார்அளிக்கலாம். ‘துணை ஆணையர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, சென்னை பெருநகரகாவல் துறை, கிரீம்ஸ் ரோடு (ஆயிரம்விளக்கு காவல் நிலைய வளாகம்) ஆயிரம்விளக்கு, சென்னை - 600006’ என்றமுகவரிக்கும் தபாலில் புகாரை அனுப்பலாம். சென்னை மாநகர காவல் துறையின் முகநூல் பக்கத்திலும் (Chennai.Police) புகார் தெரிவிக்கலாம். புகார் அளிப்போர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.