சைபர் குற்றங்களை தடுக்க விரைவில் புதிய திட்டம் சென்னை பெருநகர காவல் ஆணையர் தகவல்

சைபர் குற்றங்களை தடுக்க விரைவில் புதிய திட்டம் சென்னை பெருநகர காவல் ஆணையர் தகவல்

Published on

சைபர் குற்றங்களை தடுக்க விரைவில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்தார்.

பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய சந்திப்பு அருகே போலீஸார் மேற்கொண்ட வாகனதணிக்கை பணிகளை சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தளர்வுகளற்ற முழு ஊரடங்குக்கு பொது மக்கள் நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். ஊரடங்கை மீறியதாக இதுவரை சென்னையில் 1 லட்சத்து 18 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 1 லட்சத்து 57 ஆயிரம் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளோம்.

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க விரைவில் புதிய திட்டம் அமல்படுத்தப்படும். சமூக வலைதளங்களை பொது மக்கள் நல்லவிஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும். தவறான செய்திகளை பரப்ப, குற்ற செயல்களுக்காக பயன்படுத்த கூடாது. சுய ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

கரோனா தொற்றால் சென்னையில் இதுவரை 1,650 போலீஸார் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,250 போலீஸார் குணமடைந்து பணிக்குதிரும்பியுள்ளனர் என்றார்.

பேட்டியின்போது, சென்னை வடக்குமண்டல இணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன், போக்குவரத்து (வடக்கு) இணை ஆணையர் எம்.வி.ஜெயகவுரி, பூக்கடை காவல் துணை ஆணையர் இ.கார்த்திக், போக்குவரத்து (வடக்கு) துணை ஆணையர் ராஜசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in