

விவசாயிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், கைவினைக் கலைஞர்கள் உள்ளிட்டோர் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்யும் வகையில் 3 கிராம அங்காடிகளை 2 மாவட்டங்களில் அமைக்க நபார்டு வங்கி நிதி வழங்கி உள்ளது.
இதுகுறித்து, தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) தமிழ்நாடு மண்டல தலைமை பொதுமேலாளர் எஸ்.செல்வராஜ் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது:
கிராமப்புறத்தைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள், விவசாயிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், கூட்டு பொறுப்புக் குழுக்கள், உழவர் மன்றங்கள் ஆகியவை தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய சரியானதளங்கள் இல்லை. இடைத்தரகர்கள் மூலம் பொருட்களை விற்பதால், அவர்கள் உற்பத்தி செய்யும்பொருட்களுக்கு நியாயமான விலை, லாபம் கிடைப்பதில்லை.
இந்நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில், கிராம அங்காடிகளை அமைக்க நபார்டு வங்கிநிதியுதவி அளிக்கிறது. இதன்படி,தமிழகத்தில் 30 கிராம அங்காடிகள்அமைக்க ரூ.82.02 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தாலுகா தலைநகர்களில் கிராம அங்காடி அமைக்கரூ.2.58 லட்சமும், மாவட்ட தலைநகர்களில் அமைக்க ரூ.3.45 லட்சமும்வழங்கப்படுகிறது.
அதன்படி, நெல்லை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கிராம அங்காடி மூலம் பத்தமடை பாய்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல், கரோனா ஊரடங்குகாலத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட அங்காடிமூலம், காய்கறி விற்பனை செய்யப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம்ஒட்டன்சத்திரத்தில் அமைக்கப்பட்ட கிராம அங்காடிகளில் முகக் கவசங்கள், கிருமிநாசினி விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் மூலம்ஏராளமானோர் பயனடைந்துள்ளனர்.
இதற்கிடையே, நடப்பு ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 கிராமஅங்காடிகள் அமைக்கப்பட உள்ளன. இங்கு, கால்நடைத் தீவனங்கள், உரங்கள், தேன், மூங்கில் மூலம் செய்யப்பட்ட பொருட்கள், பழங்கள், முட்டைகள் ஆகியவை விற்பனை செய்யப்படும்.
இதேபோல், தேனி மாவட்டத்தில் அமைய உள்ள அங்காடியில், ஊறுகாய்கள், சத்துமாவு தானியங்கள் உள்ளிட்ட பொருட்கள், விற்பனை செய்யப்படும்.
நபார்டு வங்கியின் இச்சேவைகளை விவசாயிகள், மகளிர் குழுக்கள் உள்ளிட்டோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு செல்வராஜ் கூறினார்.