

சிவகங்கை மாவட்டத்தில் முதல் முறையாக திருப்பத்தூரில் கரோனா தொற்றுக்குச் சிகிச்சை அளிக்க 100 படுக்கைகளுடன் சித்த மருத்துவ மையம் தொடங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,000-ஐக் கடந்தது. இதுவரை 33 பேர் இறந்துள்ளனர்.
கரோனா தொற்றைக் குணப்படுத்துவதில் சித்த மருத்துவம் நல்ல பலனளித்து வருகிறது. இதையடுத்து, சித்த மருத்துவ சிகிச்சைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் முதல் முறையாக கரோனா தொற்றுக்குச் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் திருப்பத்தூர் ஸ்வீடிஷ் மிஷன் மருத்துவமனையில் சித்த மருத்துவ மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதனைக் கதர் கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் இன்று (ஜூலை 26) தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், எம்எல்ஏ கே.ஆர்.பெரியகருப்பன், சுகாதாரத் துணை இயக்குநர் யசோதாமணி, வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு சித்த மருந்துகளுடன் யோகா, உடற்பயிற்சி போன்றவை அளிக்கப்பட உள்ளன. கரோனா பாதித்தவர்களை 5 நாட்களில் குணப்படுத்த முடியும் என, சித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.