

கரோனாவால் ரத்த தானம் செய்வது குறைந்து, ஜிப்மரில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளதால் அச்சப்படாமல் ரத்த தானம் தரலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றால் உலகெங்கும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு முடங்கியுள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டோர் தொடங்கி உடல்நலக் குறைவில் உள்ளோர் மருத்துவமனைகளை நாடுகின்றனர். இச்சூழலில், மருத்துவமனைகளில் ரத்த தானம் செய்ய வருவோர் எண்ணிக்கையும் குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜிப்மர் ரத்த வங்கி தொழில்நுட்ப உயர் அலுவலர் செல்வி கூறுகையில், "புதுச்சேரியில் பல்வேறு தன்னார்வலர்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ரத்த தான முகாமை நடத்துவது வழக்கம். இதன் மூலம், புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கிக்கு அதிக அளவிலான ரத்தம் கிடைத்தது. இதன் மூலம் ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் ரத்தம் செலுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், கரோனா தொற்று காரணமாக பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் அவர்கள் மூலம் கிடைக்கப்பெறும் ரத்த தானம் தடைப்பட்டுள்ளது. கரோனா பயம் காரணமாக பல்வேறு தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்ய முன்வரவில்லை. இதனால், ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் ரத்த இருப்பு குறைந்துள்ளது.
தன்னார்வலர்கள் பொதுமக்கள் முன்வந்து ரத்த தானம் செய்ய வேண்டும். நோய்த் தொற்று பரவும் என அச்சப்பட வேண்டாம். உரிய பாதுகாப்புடன் ரத்தம் பெறப்படுகிறது" என்று தெரிவித்தார்.