Last Updated : 26 Jul, 2020 02:30 PM

 

Published : 26 Jul 2020 02:30 PM
Last Updated : 26 Jul 2020 02:30 PM

மகளுக்குச் சம்பந்தம் முடித்த தினகரன்: சசிகலா தலைமையில் திருமணத்தைப் பிரம்மாண்டமாக நடத்தத் திட்டம்

வாண்டையார் குடும்பத்தில் மகளுக்குச் சம்பந்தம் முடித்த தினகரன்.

தஞ்சாவூர்

சசிகலாவின் அக்காள் மகனும் அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் தனது மகளுக்கு பூண்டி துளசி ஐயா வாண்டையாரின் பேரனைத் திருமணம் பேசி முடித்துள்ளார்.

இந்தத் திருமணத்துக்கு இரண்டு குடும்பங்களின் முக்கியத் தலைகளான துளசி ஐயா வாண்டையாரும், சசிகலாவும் சம்மதித்திருப்பது இரண்டு தரப்பிலும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூண்டி வாண்டையாரின் குடும்பம் தஞ்சை ஜில்லாவில் பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பம். துளசி ஐயா வாண்டையார் காங்கிரஸ் கட்சி சார்பில் தஞ்சையில் போட்டியிட்டு எம்.பி.யாகவும் இருந்தவர். அவரது மகன் கிருஷ்ணசாமி வாண்டையார் தந்தை வழியில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தவர். தற்போது கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவராக இருக்கிறார்.

கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகன் ராமநாதன் வாண்டையார் அண்மையில் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக திடீரென நியமிக்கப்பட்டார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவருக்கு தினகரன் தரப்பில் திருமணமும் உறுதி செய்யப்பட்டிருப்பது கூடுதல் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.

துளசி ஐயா வாண்டையார் குடும்பத்துச் சம்பந்தம் என்றதும் தினகரன் உடனடியாக இதுகுறித்து சிறையில் இருக்கும் சித்தி சசிகலாவிடம் பேசியிருக்கிறார். அதற்கு அவர், “ஜாதகப் பொருத்தம் இருக்கிறதா என்று நம் தரப்பிலும் பார்த்துவிட்டுச் சொல். பொருத்தம் நல்லபடியாக அமைந்தால் மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று தினகரனை உற்சாகப்படுத்தினாராம் சசிகலா.

சித்தி சம்மதம் சொன்ன பிறகு, ஜாதகப் பொருத்தம் அமோகமாக இருக்கவே, அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையில் இறங்கி இருக்கிறார் தினகரன்.

இதையடுத்து நேற்று முன் தினம், புதுச்சேரி அருகே கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள தினகரனில் பண்ணை வீட்டில் இரண்டு குடும்பமும் சந்தித்து திருமணத்தை உறுதி செய்தனர். இந்த நிகழ்வில் இரண்டு குடும்பங்களைத் தவிர மற்றவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்கிறார்கள்.

இது திருமண நிச்சயதார்த்தம் இல்லை. திருமண உறுதி செய்வது மட்டுமே. பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டார் சார்பில் பூவும், பொட்டும் வைத்து விடுவார்கள். அன்றிலிருந்து அந்தப் பெண் அவர்கள் வீட்டுப் பெண் என்பது அந்த குடும்பங்களில் வழக்கம். மற்றபடி சசிகலா விடுதலையாகி வந்த பிறகே நிச்சயதார்த்தம் இருக்கும் என்கிறார்கள்.

இதனிடையே வரும், செப்டம்பர் மாதத்தில் சசிகலா விடுதலையாவது உறுதி என அடித்துக் கூறும் அவரது விசுவாச வட்டத்தினர் , “சின்னம்மா வெளியில் வந்ததும் நடக்கும் முதல் சுப நிகழ்வாக இந்தத் திருமண நிச்சயதார்த்தம் இருக்கும். தை மாதத்தில் திருமணம் நடக்குமாம்” என்கிறார்கள்.

இரண்டு பெரிய குடும்பத்துத் திருமணம் என்பதால் திருமண விழாவை தஞ்சையே சிறக்க பிரம்மாண்டமாய் நடத்த வேண்டும் என்று இரண்டு தரப்பிலும் விரும்புகிறார்களாம். சசிகலா தலைமையில் நடத்தத் திட்டமிடப்படும் இந்தத் திருமணத்துக்க்கு அனைத்துக் கட்சியினரையும் அழைக்க முடிவெடுத்துள்ளனர். தான் சிறைக்குப் போனதால் சிதறிப்போன தனது குடும்பத்தின் செல்வாக்கை இதன் மூலம் மீண்டும் பெற்றுவிடலாம் என்பதும் சசிகலாவின் திட்டம் என்கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x