ஏனாமில் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுவோருக்கு இன்று முதல் சிக்கன், வேர்க்கடலை

கரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுவோருக்கு இன்று முதல் சிக்கன், வேர்க்கடலை.
கரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுவோருக்கு இன்று முதல் சிக்கன், வேர்க்கடலை.
Updated on
1 min read

புதுச்சேரி பிராந்தியமான ஏனாமில் கரோனா தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு இன்று முதல் தன்னார்வலர்கள் உதவியுடன் சிக்கன், வேர்க்கடலை தரப்படுகிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்கள் உள்ளன. அதில், தமிழகம் அருகே புதுச்சேரி, காரைக்காலும், கேரளம் அருகே மாஹேயும், ஆந்திரம் அருகே ஏனாம் பிராந்தியமும் அமைந்துள்ளன.

தற்போது ஏனாம் பிராந்தியத்தில் கரோனா தொற்றுடைய 43 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோருக்கு அரசுத் தரப்பில் மூன்று வேளையும் உணவு தரப்படுகிறது. இன்று (ஜூலை 26) முதல் சைவ உணவுடன், சிக்கனும் தரப்படுகிறது.

கரோனா நோயாளிகளுக்கு விநியோகிக்கப்படும் உணவு.
கரோனா நோயாளிகளுக்கு விநியோகிக்கப்படும் உணவு.

அத்தொகுதியின் எம்எல்ஏவும் அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ் அறிவுறுத்தலின்பேரில், தன்னார்வ அமைப்பினர் இவ்வுணவினைத் தயாரித்து தருகின்றனர். அதை ஏனாம் நிர்வாகி சிவராஜ் மீனா உத்தரவின்பேரில் நோய்த் தொற்றாளர்களுக்குத் தருகின்றனர்.

இதுதொடர்பாக அரசுத் தரப்பில் விசாரித்தபோது, "புதுச்சேரியில் கரோனா தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு மூன்று வேளை உணவு தரப்படுகிறது. காலை உணவாக இட்லி, சாம்பார், வடை, பழம் ஆகியவை 7 மணிக்கும், காலை 10.30 மணிக்கு தேநீரும், பகல் 12.30 மணிக்கு சைவ மதிய உணவாக சாப்பாடு, சாம்பார், ரசம், கூட்டு, பழம் ஆகியவை தரப்படும். மாலை 3 மணிக்கு மேல் டீயும், இரவு 7.30 மணிக்கு சாப்பாடு, சப்பாத்தி, ரசம், சாம்பார் ஆகியவைும் தரப்படுகிறது.

ஏனாமில் இன்று முதல் அரசு சார்பில் தரும் மதிய உணவுடன் ஒவ்வொரு நபருக்கும் 250 கிராம் சிக்கன் இணைத்துத் தருகிறோம். இதைத் தன்னார்வலர்கள் தயாரித்துத் தந்து விடுகின்றனர். அத்துடன் சில நாட்களுக்கு முன்பிருந்து காலை உணவுடன் தர அவித்த முட்டையும் தருகின்றனர். இன்று முதல் மாலை டீயுடன் அவித்த வேர்க்கடலையும் தர உள்ளனர். இதை தினமும் வழங்க உள்ளனர்.

கரோனா தொற்றிலிருந்து மீள சத்தான உணவு அவசியம் என்ற சூழலில் கூடுதலாக இன்று முதல் சிக்கன், முட்டை, வேர்க்கடலை தருவது அவர்களை நோய்த் தொற்றிலிருந்து விரைந்து குணம் பெற வழிவகுக்கும்" என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in