

நீண்ட நாட்களுக்குப் பிறகு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், முதல்வர் நாராயணசாமியும் வணக்கம் தெரிவித்து இன்று உரையாடி கொண்டனர்.
கடந்த 1999-ம் ஆண்டு கார்கில் போரில் இந்தியா வென்றது. இப்போரின் வெற்றிக்காக மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கார்கில் வெற்றி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கார்கில் போரின் 21-ம் ஆண்டு வெற்றி தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, சபாநாயகர் சிவக்கொழுந்து, முதல்வரின் நாடாளுமன்ற செயலாளர் லட்சுமி நாராயணன் மற்றும் அதிகாரிகள் பலர் புதுச்சேரி கடற்கரையில் உள்ள போர் வீரர்களின் நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் பங்கேற்ற துணைநிலை ஆளுநரும், முதல்வரும் மரியாதை நிமித்தமாக வணக்கம் தெரிவித்து நீண்ட நாட்களுக்குப் பிறகு பேசிக்கொண்டனர்.
அப்போது, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, "சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எப்போது கரோனா பரிசோதனை நடக்க உள்ளது? சவால்களுக்கு மத்தியில் பட்ஜெட்டை நிறைவேற்றியுள்ளீர்கள். பாராட்டுகள்" என்று தெரிவித்தார்.
அதற்கு முதல்வர் நாராயணசாமி, "திங்கள்கிழமையன்று (ஜூலை 27) அனைவருக்கும் பரிசோதனை செய்ய உள்ளோம். பட்ஜெட் தொடர்பான வாழ்த்துக்கு நன்றி" என்று பதில் கூறினார்.
இதேபோல், உடனிருந்த சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம், "சரியான நேரத்தில் சட்டப்பேரவை நிகழ்வை மரத்தடியில் திறந்த வெளியில் நடத்தியது வரவேற்கத்தக்கது. ஆனால், இது மீண்டும் நிகழக்கூடாது. எனினும், இது வரலாற்று நிகழ்வு. மரத்தடி சட்டப்பேரவை நிகழ்வு புகைப்படத்தைப் பார்த்தேன். அப்புகைப்படத்தை பத்திரமாக வைத்திருங்கள்" என்று கிரண்பேடி கூறினார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு கிரண்பேடியும், நாராயணசாமியும் வணக்கம் தெரிவித்து நேருக்கு நேர் உரையாடி பாராட்டிக் கொண்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.