

கோவையில் 37 மணி நேர தளர்வில்லா ஊரடங்கு காரணமாக முக்கியச் சாலைகள் போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன.
கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் நேற்று மாலை 5 மனி முதல் திங்கள் காலை 6 மணி வரை தளர்வில்லா ஊரடங்கு பிறப்பித்துள்ளார்.
இதனையடுத்து அத்தியாவசியப் பொருட்கள் கடை உட்பட அனைத்துக் கடைகளும் மூடியுள்ளன. பால் மற்றும் மருந்துக் கடைகள் மட்டுமே திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதுவும் கூட சில மணி நேரங்கள் மட்டுமே திறந்து வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
முக்கிய சாலைகள் வெறிச்சோடிக்கிடந்தாலும் போலீஸார் சில இடங்களில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏனெனில் பல காரணங்களைக் கூறி மக்கள் வெளியே வருவதும் உள்ளன.
சுமார் 3,500 போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை மாவட்ட எல்லைப் பகுதிகளில் கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தச் சோதனைகளையும் மீறி சிலர் இ-பாஸ் இல்லாமல் வரும் சந்தர்ப்பங்களும் உள்ளன, அவர்களையும் தீவிர சோதனைக்கு போலீஸார் உட்படுத்துகின்றனர்.
முன் கூட்டியே ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்ட பின்னரும் ஏடிஎம் செல்கிறோம், மருந்து வாங்கச் செல்கிறோம் என்று ஒரே வண்டியில் 2, 3 பேர் வந்து கொண்டுதான் இருக்கின்றனர் என்கின்றனர் போலீசார்.
கோவையில் கரோனா பலி எண்ணிக்கை 38 ஆக உள்ளது.