

கரூர் மாவட்டத்தில் இன்று இரு மருத்துவர்கள் உள்ளிட்ட 7 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் இத்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கரோனா ஊரடங்கு நேரத்திலும் மக்களுக்கு கரோனா சிகிச்சை மற்றும் இதர சிகிச்சைகள் அளிக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் ஒருவருக்கு கடந்த இரு வாரங்களுக்கு முன் கரோனா தொற்று ஏற்பட்டதுடன் அவர் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. அதன்பின் அரசு பெண் மருத்துவரின் கணவருக்கும் அதனை தொடர்ந்து பெண் மருத்துவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அரவக்குறிச்சியில் தனியார் மருத்துவமனை மூலம் சிகிச்சை அளித்துவந்த ஓய்வுப்பெற்ற சுகாதாரப்பணிகள் இணை இயக்குநருக்கும், அவரை தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது.
மேலும், நேற்று வெங்கமேட்டை சேர்ந்த தனியார் மருத்துவர் ஒருவருக்குக் கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் நேற்று எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனை முடிவுகள் இன்று (ஜூலை 26) வெளியானது.
அதில், குளித்தலை அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர், வெங்கமேட்டைச் சேர்ந்த தனியார் மருத்துவர், வெங்கமேட்டைச் சேர்ந்த தனியார் ஜவுளி உற்பத்தி நிறுவன ஊழியர், தோட்டக்குறிச்சியைச் சேர்ந்த பேரூராட்சியைச் சேர்ந்த ஊழியர் என இன்று ஒரே நாளில் 7 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.