

தேனி மாவட்டம் உ.அம்மாபட்டி கிராமத் தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். தீயணைப்புப் படை வீரரான இவர் பெரம்பலூர் மாவட்டம் செல்லியம்பாளையம் கிராமத்தில் கடந்த ஜூலை 12-ம் தேதி கிணற்றில் விழுந்து உயிரிழந்த நபரை மீட்கச் சென்றபோது விஷ வாயு தாக்கி உயிரி ழந்தார்.
இந்நிலையில் தீயணைப்பு மீட்புத் துறை இயக்குநர் சி.சைலேந்திரபாபு பெரம்பலூர் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ராஜ்குமாரின் உருவப் படத்தை திறந்துவைத்து, தீயணைப்புத் துறை சார்பில் அவரது குடும்பத்துக்கு ரூ.44.42 லட்சம் நிதி உதவியை வழங் கினார்.
அவர் பேசியபோது, “மீட்புப் பணியின் போது உயிரிழக்கும் தீயணைப்பு- மீட்புப் படை வீரர்களின் குடும்பத்துக்கு தீயணைப்புத் துறை எப்போதும் துணை நிற்கும். மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்புத் துறை வீரர்கள் அவர்களின் சொந்த முயற்சியில் திரட்டிய ரூ.44.42 லட்சம் நிதி, ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசு ராஜ்குமாரின் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ.10 லட்சமும், அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதன்படி, அவரது மனைவிக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு வேலை வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள 349 தீயணைப்பு நிலையங்களில் கடந்த ஆண்டு 7,500 தீயணைப்பு வீரர்கள், சுமார் 50,000 தீயணைப்பு உதவி தொலைபேசி அழைப்புகளை பெற்று 25,000 மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
1956-ம் ஆண்டிலிருந்து இதுவரை 59 தீயணைப்பு வீரர்கள் மற்றும் அலுவலர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளின்போது உயிரிழந்துள்ளனர்” என்றார்.
இந்நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா, தீயணைப்புத் துறை திருச்சி மண்டல இயக்குநர் மீனாட்சி விஜயகுமார் மற்றும் தீயணைப்புத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.