

சென்னை காலநிலை கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த விகாஸ் மாதவ் நேற்று வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லை. ஆனால் அப்பகுதியில் தனியார் மருந்துதொழிற்சாலை இயங்கி வருவதாகவும், அவற்றிலிருந்து நச்சுக்கழிவுகள் வெளியேற்றப்படுவதாகவும் அப்பகுதி கிராமவாசிகள் புகார் தெரிவித்து வந்தனர்.
அதன் அடிப்படையில் சென்னைகாலநிலை கண்காணிப்பு குழு மற்றும் சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பு சார்பில் அங்குள்ள நீர்ப்பாசன கிணறு, தொழிற்சாலை அருகில் உள்ள குளம், ஆலையில் இருந்து வெளியேறும் மழைநீர் கால்வாய் ஆகியவற்றில் இருந்து நீர் மாதிரிகள் சேகரித்துபரிசோதிக்கப்பட்டன.
அதில், டைபுரோமோக்ளோரோ மீதேன் மற்றும் டைக்ளோரோ மீதேன், டெர்ராக்ளோரோ ஈதேன்,டோலுயீன் போன்ற நச்சுப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலை பூஜ்ஜிய நிலை கழிவு வெளியேற்றம் வசதிகொண்டதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. ஆனால், அந்த தொழிற்சாலையின் சுற்றுப்புற பகுதிகளில் நச்சுப்பொருட்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த தொழிற்சாலை டிஸோனிடைன் தயாரிக்க கரைப்பானாக பயன்படுத்தும் பொருள்தான் டைக்ளோரோ மீதேன் என்பது குறிப்பிடத்தக்கது.
வன உயிரின சரணாலயத்துக்குள் விதிகளை மீறி தனியார் தொழிற்சாலை இயங்கி வருவதுடன், நச்சு வேதிப் பொருட்களையும் வெளியேற்றி வருகிறது. இதிலிருந்து தமிழக வனத் துறையும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் தனது பணிகளை முறையாக செய்யவில்லை என்பது உறுதியாகிறது.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தைச் சுற்றியுள்ள ஈரநிலங்களே பறவைகளுக்கு உணவளிக்கின்றன. அந்த நிலங்கள் மாசுபட்டிருப்பது, பறவைகளின் உணவில் நஞ்சை கலப்பதற்கு சமம்.
இவ்வாறு அவர் கூறினார்.