

கரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கையை ஒருவர்கூட விடுபடாமல் முழுமையாக அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் கே.சண்முகம் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்வதைப்போல், இறப்பு எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. சதவீத அடிப்படையில் இறப்பு குறைவு என்றாலும், எவ்வித இணை நோய்களும் இல்லாமல் இறப்பவர்கள் எண்ணிக்கை தொடர்வது பொதுமக்கள் மத்தியில் சற்றே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை உயிரிழந்தவர்களில் 444 பேர் பெயர்கள் சேர்க்கப்படாதது குறித்து, குழு அமைக்கப்பட்டு குழுவின் ஆய்வு அடிப்படையில் அந்த எண்ணிக்கையும் சேர்க்கப்பட்டுள்ளது.
சர்ச்சைகள் கூடாது
இந்நிலையில், எதிர்காலத்தில் இறப்பு விவரத்தை வெளியிடுவதில் சர்ச்சைகள் ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர்களுக்கு புதிய அறிவுறுத்தல்களை தலைமைச் செயலர் கே.சண்முகம் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை எதிர்காலத்தில் விடுபடாமல் இருக்க, மாநில அளவிலான குழு ஒன்று அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குநர் தலைமையிலான இக்குழுவில் மருத்துவக் கல்வி இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவ இயக்குநர் மற்றும் சென்னை மாநகர சுகாதார அதிகாரி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
வாரா வாரம் ஆய்வு
இவர்கள் வார அடிப்படையில் உயிரிழப்புகள் தொடர்பான விவரங்களை ஆய்வு செய்வார்கள். சுகாதார நிறுவனங்கள், அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் இருந்து பெறப்படும் விவரங்களை மத்திய அரசு மற்றும் ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல்கள்படி முழுமையாக ஆய்வு செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இக்குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மாநில சுகாதாரத் துறையின் அறிவிக்கைப்படி மாவட்ட ஆட்சியர்கள் தினசரி கரோனா உயிரிழப்புகள் தொடர்பான விவரங்களை சரியாக ஆய்வு செய்து, உள்ளாட்சி அமைப்புகளுடன் ஆலோசித்து எந்த ஒரு உயிரிழப்பும் விடு படாமல் சமர்ப்பிக்க வேண்டும்.
அடக்கம் அல்லது தகனம்..
எனவே, மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து கிடைக்கும் உயிரிழப்புகள் பற்றிய விவரங்களை, உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து கிடைக்கும் விவரங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்ய வேண்டும். அடக்கம் அல்லது தகனம் தொடர்பான விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். எந்த ஒரு உயிரிழப்பும் விடுபடாமல் விவரங்களை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.